மும்பை: மகாராஷ்டிராவில் அதிவேகமாக வந்த கன்டெய்னர் ஒன்று கார் மீது மோதியதில் சாலையோரத்தில் பேருந்துக்காக காத்திருந்தவர்கள் உள்பட 10 பேர் பரிதாபமாக பலியாகினர். 20 பேர் காயமடைந்தனர்.
மகாராஷ்டிரா மாநிலம் துலே மாவட்டத்தில் கன்டெய்னர் லாரி ஒன்று இன்று (ஜூலை 4) காலை கார் மீது மோதியது. அந்த லாரி, துலேவில் இருந்து மத்தியப் பிரதேசம் நோக்கிச் சென்று கொண்டிருந்தது. அப்போது, மும்பையில் இருந்து 300 கிலோ மீட்டர் தொலைவில் மும்பை – ஆக்ரா நெடுஞ்சாலையில் இந்த விபத்து நடந்தது. விபத்தில் 10 பேர் பலியான நிலையில் 20 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வேகத்தைக் காட்டிக் கொடுத்த சிசிடிவி காட்சி: விபத்து நடந்த பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளில், கன்டெய்னர் லாரி அதிவேகமாக சாலையில் பயணித்தது உறுதியாகியுள்ளது. அதிவேகத்தில் வந்த அந்த லாரி, எதிரே வந்த வெள்ளை நிற கார் மீது மோதுகிறது. இதில் அங்கே புழுதி பறக்க வாகனம் எது எங்கே இருக்கிறது என்று அறிந்துகொள்ள இயலாமல் கட்டுப்பாடின்று தாறுமாறாக ஓடுகிறது.
அப்போது, சாலையோரம் இருந்த பேருந்து நிலையத்தில் பேருந்துக்காகக் காத்திருந்த பொது மக்கள் மீதும் மோதுகிறது. வாகனங்களில் பயணித்தவர்கள், சாலையோரம் நின்றவர்கள் என இந்த விபத்தில் இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர். காயங்களுடன் 20 பேர் ஷிர்பூர் மற்றும் துலே மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
அண்மையில் மகாராஷ்டிராவில் பேருந்து ஒன்று தீப்பிடித்து எரிந்ததில் 25-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அந்தச் சம்பவம் ஏற்படுத்திய சோகம் (மகாராஷ்டிர பேருந்து விபத்து: 10 நிமிடங்களுக்குள் எல்லாம் முடிந்து விட்டது – உயிர் தப்பிய பயணி பேட்டி) நீங்குவத்றகுள் அம்மாநிலத்தில் இன்னொரு பெரிய சாலை விபத்து நிகழ்ந்துள்ளது.