திருவண்ணாமலையில் `லால் சலாம்’ படப்பிடிப்பை முடித்த கையோடு, கோயிலுக்குச் சென்று சாமி தரிசனமும் முடித்துவிட்டு, சென்னை திரும்பிவிட்டார் ரஜினிகாந்த். இந்நிலையில் `லால் சலாம்’ படப்பிடிப்பின் அப்டேட் குறித்து விசாரித்தேன்.
லைகா தயாரிப்பில் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ரஜினி கௌரவ தோற்றத்தில் நடித்து வரும் படம் ‘லால் சலாம்’. இந்தப் படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த், செந்தில், ஜீவிதா ராஜசேகர் உட்படப் பலர் நடித்து வருகின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவு செய்கிறார். ரஜினி இதில் இஸ்லாமியராக (மொய்தீன் பாய்) வருகிறார்.
இதன் படப்பிடிப்பு செஞ்சியில் உள்ள பழைமை வாய்ந்த அம்மன் கோயில் ஒன்றில் தொடங்கி, பாண்டிச்சேரி, மும்பை, பாண்டிச்சேரி, திருவண்ணாமலை எனத் தொடர்ந்து நடந்துள்ளது. கிரிக்கெட் தொடர்பான இந்தக் கதையில் முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவ் முக்கியமான ஒரு காட்சியில் நடித்துள்ளார். படத்தில் மற்றொரு கிரிக்கெட் ஜாம்பவானும் தோன்றவிருக்கிறார் என்கிறார்கள்.
சமீபத்தில் பாண்டிச்சேரி, திருவண்ணாமலையில் நடந்த படப்பிடிப்பில் ரஜினி பங்கேற்றுள்ளார். அதில் அவரது போர்ஷன் படப்பிடிப்பு முழுவதும் முடிந்த பிறகே, அண்ணாமலையாரை தரிசனம் செய்துவிட்டு, நிறைவுடன் சென்னை திரும்பியிருக்கிறார் ரஜினி.
இதுவரை படத்தின் 60 சதவிகித படப்பிடிப்புக்கு மேல் முடிந்துள்ளது என்றும், அடுத்துப் படப்பிடிப்பு செஞ்சியில் மீண்டும் தொடங்குகிறது என்றும் சொல்கிறார்கள். அதனை அடுத்து திருவண்ணாமலை, சென்னையில் படப்பிடிப்பு தொடரவிருக்கிறது. ஆகஸ்ட்டில் இந்தப் படத்தின் மொத்த படப்பிடிப்பும் நிறைவு பெறும். ரஜினி கௌரவ தோற்றத்தில் நடிப்பதால், அவரது போர்ஷனை எளிதாக முடித்துவிட்டாலும், மேற்கொண்டு பேட்ச் ஒர்க் தேவைப்பட்டால் அதனை சென்னையில் வைத்தே நடத்தவும் உத்தேசித்துள்ளனர்.