காரைக்குடி: “அமைச்சர் செந்தில் பாலாஜியைக் காப்பாற்ற துணைபோகும் கட்சிகள் மீது மக்கள் அதிருப்தி அடைந்தால், மோடியை வீழ்த்துவதற்கு இடையூராகிவிடும்” என்று தமிழ்நாடு தன்னுரிமை கழக நிறுவனத் தலைவரும், முன்னாள் எம்எல்ஏவுமான பழ.கருப்பையா கருத்து தெரிவித்தார்.
காரைக்குடியில் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: ”செந்தில்பாலாஜி வழக்கில் நீதிமன்றங்கள் தடுமாறிக் கொண்டிருக்கின்றன. நீதிபதிகள் இருவர் மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கியுள்ளனர். நீதி என்பது ஒன்றாகத்தான் இருக்க முடியும். முதல்வர் மு.க.ஸ்டாலினே செந்தில பாலாஜி செய்த முறைகேடுகள் குறித்து பேசிவிட்டு, தற்போது அமைதியாக உள்ளார். இது மக்களை சிந்திக்க வைக்கும்.
பிரதமர் மோடி அமலாக்கத் துறையை கையில் வைத்து கொண்டு பழிவாங்குகிறது என்பது வேறு. ஆனால், இந்த வழக்கை அமலாக்கத் துறை 2 மாதங்களுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தான் முடுக்கிவிட்டது. செந்தில் பாலாஜி ஊழல் செய்துள்ளார் என்பது உலகத்துக்கே தெரியும்.
செந்தில் பாலாஜியை காப்பாற்ற துணைபோகிற கட்சிகள் மீது மக்கள் அதிருப்தி ஏற்பட்டால் மோடியை வீழ்த்துவதற்கு இடையூராகிவிடும். கூட்டணி கட்சிகள் தேர்தல் முடிந்தவுடன், கூட்டணியில் இருந்து வெளியேறி, ஆளும் கட்சி தவறை சுட்டிக்காட்ட வேண்டும். ஐந்து ஆண்டுகளும் கூட்டணியிலேயே தொடரக் கூடாது. அனைவரும் ஒன்று சேர்ந்தால் மட்டுமே மோடியை வீழ்த்தி விட முடியாது” என்று அவர் கூறினார்.