உலகில் அதிக சம்பளம் வாங்கும் உச்ச நட்சத்திரங்களின் பட்டியலில் உச்சத்தில் இருப்பவர் பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ்.
டூப் ஆர்ஸ்டிஸ்ட்களைப் பயன்படுத்தாமல் தாமே களத்தில் இறங்கி துணிச்சலாக ஸ்டன்ட் காட்சிகளில் நடிப்பதில் ஆர்வம் கொண்ட இவர், தனது படங்களில் பிரமிக்க வைக்கும் பல ஸ்டன்ட்களைத் தொடர்ந்து துணிச்சலுடன் செய்து வருகிறார்.
‘Mission: Impossible – Ghost Protocol’ படத்தில் உலகின் உயரமான பில்டிங்கான ‘புர்ஜ் கலிஃபா’வில் சுமார் 1,700 அடி உயரத்திலிருந்து குதித்தது, ‘Mission: Impossible – Rogue Nation’ படத்தில் பறக்கும் விமானத்தின் வெளியே தொங்கிக் கொண்டு சரியான டேக் கிடைக்கும் வரை எட்டு முறை மொத்தம் சுமார் 48 மணி நேரம் பறந்தது எனப் பல ஸ்டன்ட் காட்சிகளில் நடித்து ரசிகர்களைப் பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளார்.
அந்த வரிசையில் தற்போது வரும் ஜூலை 12ம் தேதி கிறிஸ்டோபர் மெக்குவாரி இயக்கத்தில் வெளியாகவுள்ள ‘Mission: Impossible – Dead Reckoning Part’ திரைப்படத்திலும் மலை உச்சியிலிருந்து குதிக்கும் பைக் ஸ்டன்ட் காட்சி ஒன்றில் நடித்து அசத்தியுள்ளார்.
இப்படத்தின் டிரெய்லர் வெளியானது முதல் இந்தக் காட்சி ரசிகர்களிடையே சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் தற்போது இந்த ஸ்டன்ட் காட்சி படமாக்கப்பட்ட படப்பிடிப்பு வீடியோவைப் படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் பாராசூட்டுடன் உண்மையிலேயே டாம் குரூஸ், பைக்கில் வேகமாகச் சென்று மலை உச்சியிலிருந்து குதிக்கும் காட்சிகள் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
ஹோண்டா CRF 250 பைக்கில், நார்வேயில் ஒரு மலைத்தொடரில் ஸ்டன்ட் காட்சிக்கென பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட ரேம்பில் 4000 அடி ஆழத்தில் குதித்திருக்கிறார் டாம் குரூஸ். படமாக்க ஏதுவாக தரையைத் தொட 500 மீட்டர் இருக்கும்போதுதான் தன் பாராசூட்டைத் திறந்துள்ளார். பலமுறை இதே பாணியில் இந்த ஸ்டன்ட் படமாக்கப்பட்டு படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. 60 வயதிலும் டாம் குரூஸ், இது போன்ற சாகசக் காட்சிகளில் நடிப்பதைப் பலரும் வியந்து பாராட்டி வருகின்றனர்.
இந்நிலையில் இதுபற்றி நேர்காணல் ஒன்றில் பேசியுள்ள டாம் குரூஸ், “ஒவ்வொரு முறை அந்தக் காட்சியை எடுக்கும்போதும், அந்த ரேம்ப்பில் பைக்குடன் குதிக்கும்போதும் என் உயிரையே இழக்கத் துணியும் ஆபத்தான செயலாக நான் அதை உணர்வேன். உண்மையில் அது மிகவும் ஆபத்தான துணிச்சல்தான். இந்தக் காட்சி பார்ப்பதற்கு ஈஸியாக இருந்தாலும் அதைச் செய்வது மிகவும் சவாலான விஷயம்.
பைக்கிக்கை ஓட்டும் வேகத்தில் ஸ்பீடோமீட்டரைக்கூட பார்க்க முடியாது. பைக்கின் அதிர்வை வைத்துத்தான் வேகத்தை உணர்வேன். அந்த அளவிற்குப் பயிற்சி எடுத்திருந்தேன். அதுமட்டுமின்றி, ஒரே நேரத்தில் ஸ்டன்ட் செய்ய வேண்டும், நடிக்க வேண்டும், பின்னாடி இருக்கும் ஹெலிகாப்டரையும், முன்னாடி போகும் ட்ரோனையும் கவனத்தில் வைக்க வேண்டும். அதேசமயம் சரியான நேரத்தில் பைக்குடன் குதித்து பாரா சூட்டைத் திறக்க வேண்டும். இவை அனைத்தையும் ஒரே நேரத்தில் செய்வது மிகவும் சவாலானது.
ஆனால், எல்லா இம்பாசிபிள் திரைப்படத்தின் படப்பிடிப்பின்போதும் `பாதுகாப்பாக இருக்க நினைக்காதீர்கள். தகுதியுடனும் இருக்க நினையுங்கள்’ (Don’t be safe. Be competent!) என்பதைத்தான் நாங்கள் அடிக்கடி சொல்லிக்கொள்வோம்” என்று கூறினார்.
மேலும், ஸ்டன்ட் மீதான தன்னுடைய ஆர்வம் பற்றிப் பேசிய டாம் குரூஸ், “எனக்கு எப்போதும் ஆபத்தான விஷயங்களைச் செய்வதில் அதிக ஆர்வமிருக்கும். நான் சிறுவனாக இருந்தபோதே, நானே சைக்கிளில் குதித்து ஸ்டன்ட் செய்து பார்ப்பேன். ஒருமுறை சைக்கிளில் ஒரு மலையிலிருந்து கீழே இறங்கும் சாகசங்கள் செய்ய முயற்சி செய்தபோது கீழே விழுந்து எங்கும் ரத்தம் வழிந்தபடி காயமடைந்தேன். அன்றிலிருந்து இன்றுவரை பல ஆண்டுகளாக ஸ்டன்ட்கள் செய்து வருகிறேன். பலமுறை ரத்தம் வழிந்தபடி எலும்புகள், பற்கள் உடைந்திருக்கின்றன. ஆனாலும், இதுபோன்ற ஸ்டன்ட்கள் செய்வதில்தான் எனக்கு அதீத ஆர்வம்” என்று நெகிழ்ச்சியாகக் கூறியுள்ளார்.
இந்த `Mission: Impossible – Dead Reckoning Part 1′ படத்தில் டாம் குரூஸ், ரெபெக்கா ஃபெர்குசன், ஹேலி அட்வெல், வனேசா கிர்பி, போம் க்ளெமென்டிஃப், எசாய் மொரால்ஸ், சைமன் பெக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படம் ஆங்கிலம், தமிழ், இந்தி எனப் பல மொழிகளில் ஐமேக்ஸ் பார்மேட்டிலும் வெளியாகிறது.