சென்னை வேளச்சேரி, சசி நகர் அருகேயுள்ள ஏரிப் பகுதியில் பச்சிளம் பெண் குழந்தையின் சடலம் மிதந்தது. அதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அந்தப் பகுதி மக்கள், வேளச்சேரி காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், குழந்தையின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அதைத் தொடர்ந்து ஏரியில் பச்சிளம் குழந்தையை வீசியது யாரென்று விசாரித்தனர். விசாரணையில் குழந்தையை ஏரிக்குள் வீசியது, அதே பகுதியைச் சேர்ந்த சங்கீதா (26) எனத் தெரியவந்தது.
இதையடுத்து அவரிடம் போலீஸார் விசாரித்தனர். அப்போதுதான், கணவருக்குத் தெரியாமல் தவறான நட்பில் இந்தக் குழந்தை பிறந்ததாகவும், அதனால்தான் ஏரியில் குழந்தையை வீசியதாகவும் தெரிவித்தார். அதைக்கேட்டு போலீஸாரும் சங்கீதாவின் கணவர் மற்றும் உறவினர்களும் அதிர்ச்சியடைந்தனர். அதைத் தொடர்ந்து குழந்தையைக் கொலைசெய்த குற்றத்துக்காக சங்கீதாவை போலீஸார் கைதுசெய்தனர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
இது குறித்து வேளச்சேரி போலீஸார், “கைதுசெய்யப்பட்ட சங்கீதாவுக்குத் திருமணமாகிவிட்டது. இரண்டு வயதில் பெண் குழந்தையும் இருக்கிறது. சங்கீதாவின் கணவர், பெயின்ட்டராக வேலை செய்து வருகிறார். இந்தச் சூழலில் சங்கீதா மீண்டும் கர்ப்பமடைந்தார். ஆனால் அதை மறைத்தார். சங்கீதாவின் வயிறு பெரிதாகத் தெரிந்ததும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அது குறித்து சங்கீதாவிடம் விசாரித்தனர். அதற்கு, `விஷேசம் ஒன்றுமில்லை, தொப்பை விழுந்துவிட்டது’ எனக்கூறி சங்கீதா சமாளித்து வந்திருக்கிறார். இந்தச் சூழலில் சங்கீதாவுக்கு குழந்தைப் பிறந்ததும் வயிறு சுருங்கிவிட்டது. அதனால் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஏரியில் பெண் குழந்தை சடலம் கிடைத்ததும், சங்கீதாமீது சந்தேகம் இருப்பதாக காவல் நிலையத்தில் புகாராகத் தெரிவித்தனர். அதன்பேரில் அவரிடம் விசாரித்தபோதுதான், தவறான நட்பில் சங்கீதாவுக்கு குழந்தை பிறந்த தகவல் தெரியவந்தது. மேலும் அந்தக் குழந்தையை மறைக்க அவர் ஏரியில் வீசியதும் தெரிந்தது. அதையடுத்து அவரைக் கைதுசெய்தோம்” என்றனர்.