சத்தீஸ்கர் மாநிலத்தில் ஆடு ஒன்று, தன்னைக் கோயிலில் பலியிட்ட நபரை அன்றே சாகடித்த விசித்திர சம்பவம் ஒன்று அரங்கேறியிருக்கிறது. அதெப்படி, ஆட்டைத்தான் கோயிலில் பலியிட்டுவிட்டார்களே பிறகு எப்படி ஆடு சாகடித்திருக்கும் என்று கேள்விகள் உங்களுக்கு எழும். ஆனால், அந்த நபர் இறந்ததற்கான முழுமுதற் காரணம் பலியிடப்பட்ட ஆடுதான்.
அதாவது, சூரஜ்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 50 வயது நபர் பாகர் சாய் என்பவர், தன்னுடைய வேண்டுதல் நிறைவேறியதையடுத்து, கோயிலில் ஆடு ஒன்றைப் பலியிட முடிவுசெய்தார்.
அதன்படி பாகர் சாய் தான் நினைத்தபடியே, கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று உள்ளூர் மக்களுடன் ஒன்றாகக் கோயிலுக்குச் சென்று ஆட்டைப் பலியிடுவதற்கான சடங்கு சம்பிரதாயங்களை முடித்துவிட்டு பலியிட்டார். பின்னர் பலியிடப்பட்ட ஆடு இறைச்சியாக்கப்பட்டுச் சமைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து சமைக்கப்பட்ட ஆட்டிறைச்சி உணவு அனைவருக்கும் பரிமாறப்பட்டது.
அப்போது பாகர் சாய்க்கு பலியிடப்பட்ட ஆட்டின் கண் உணவில் வந்திருக்கிறது. பாகர் சாயும் ஆட்டின் கண்ணை எடுத்துச் சாப்பிட, பாகர் சாயின் தொண்டையில் கண் சிக்கிக்கொண்டது. இதனால், பாகர் சாய்க்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட, உடனே அவர் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார். ஆனால் பாகர் சாய் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.