Zee News நடத்திய ஸ்டிங் ஆபரேஷனைத் தொடர்ந்து தேர்வுக்குழு தலைவராக இருந்த சேத்தன் சர்மா ராஜினாமா செய்தார். இதனையடுத்து , கடந்த பிப்ரவரி முதல் அந்த பதவி காலியாக உள்ளது. சிவசுந்தர் தாஸ் தற்போது இடைக்கால பொறுப்பாளராக செயல்பட்டு வருகிறார்.
அகர்கர் விண்ணப்பம்
ஆண்கள் தேர்வுக் குழுவில் காலியாக உள்ள இடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்பதாக பிசிசிஐ அறிவித்திருந்தது. மேலும், கடந்த வெள்ளிக்கிழமை (ஜூன் 30) இதற்கு விண்ணப்பிக்க கடைசி நாள் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், கடைசி தேதி முடிவதற்கு முந்தைய நாளில் (ஜூன் 29) அகர்கர் அந்த பதவிக்கு விண்ணப்பித்திருப்பதாக தகவல் வெளியானது. அகர்கர் தொலைக்காட்சி வர்ணனையாளராகவும், ஐபிஎல் தொடரில் டெல்லி அணியின் பயிற்சியாளர்களுள் ஒருவராக உள்ளார்.
பிசிசிஐ அறிவிப்பு
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் அங்கம் வகித்த அகர்கர், அந்த அணயில் இருந்து அண்மையில் வெளியேறினார். இது குறித்த அறிவிப்பை வெளியிட்ட டெல்லி கேப்பிட்டல்ஸ், அகர்கர் மற்றும் ஷேன் வாட்சன் ஆகியோர் அணியில் இருந்து வெளியேறிவிட்டதாக தெரிவித்தது. அகர்கர் தனது வர்ணனை பணிகள் மூலம் கிடைக்கும் வருவாய்க்கு போதுமான இழப்பீடு வழங்கப்படும் என்று பிசிசிஐ அவருக்கு உறுதியளித்தால், கடந்த வியாழக்கிழமை இந்திய தேர்வுக்குழு தலைவர் பதவிக்கு விண்ணப்பித்துள்ளார். குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அவர் மட்டுமே விண்ணப்பித்ததால் போட்டியின்றி அகர்கர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனை பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அகர்கர் ரெக்கார்டு
அகர்கர் 26 டெஸ்ட், 191 ஒருநாள் மற்றும் நான்கு டி20 போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடி உள்ளார். 2007 டி20 உலகக் கோப்பை வென்ற அணியிலும் இடம்பெற்றிருந்தார். தேர்வுக் குழுவின் மற்ற உறுப்பினர்கள், தாஸ் தவிர, சுப்ரோடோ பானர்ஜி, சலில் அன்கோலா மற்றும் ஸ்ரீதரன் ஷரத் ஆகியோர் உள்ளனர்.
கடந்த மாதம் பிசிசிஐ தொடர்பு கொண்ட பல முன்னாள் வீரர்கள், தங்களின் மற்ற வருமான ஆதாரங்களை விட ஊதியம் மிகவும் குறைவாக இருப்பதாக கூறினர். மேலும், தேர்வுக்குழு தலைவர் பதவிக்கு விண்ணப்பிக்கவும் தயங்கினார்கள். 60 வயது வரம்பைத் தளர்த்திய பிறகு, பிசிசிஐ திலீப் வெங்சர்க்கரைத் தொடர்பு கொண்டது. ஆனால் அவர் கிரிக்கெட் வாரியத்தின் உச்சக் குழுவின் உறுப்பினர் பதவியை விட்டுக்கொடுக்கத் தயாராக இல்லை என்பதால், திலீப் வெங்சர்க்கார் இதற்கு விண்ணப்பிக்கவில்லை.