ஜெருசலேம்,
இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவ வருகிறது. பாலஸ்தீனத்தின் காசா முனையை ஹமாஸ் அமைப்பு ஆட்சி செய்கிறது. இந்த அமைப்பை இஸ்ரேல் பயங்கரவாத இயக்கமாக கருதுகிறது. ஹமாஸ் அமைப்பை போன்று மேலும் சில ஆயுதமேந்திய குழுக்கள் காசா முனை, மேற்குகரையில் செயல்பட்டு வருகின்றன. அதேவேளை பாலஸ்தீனத்திற்கு மேற்கு கரையில் முகமது அப்பாஸ் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது.
மேற்குகரையின் சில பகுதிகள் இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த பகுதிகளில் இஸ்ரேலிய பாதுகாப்பு படையினருக்கும், பாலஸ்தீனிய ஆயுதக்குழுக்களுக்கும் இடையே அவ்வப்போது மோதல் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது.
இதனிடையே, இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் உள்ள மேற்குகரையின் ஜெனின் நகரில் ஆயுதக்குழுவினர் பதுங்கி இருப்பதாக இஸ்ரேல் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இந்த தகவலையடுத்து ஜெனின் நகர் மீது இஸ்ரேல் ராணுவம் நேற்று ராணுவ நடவடிக்கை மேற்கொண்டது. முதலில் ஆயுதக்குழுவினர் பதுங்கி இருப்பதாக கூறப்படும் கட்டிடங்கள் மீது ஆளில்லா டிரோன் விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது.
பின்னர், இஸ்ரேல் ராணுவத்தினர் ஜெனின் நகருக்குள் நுழைந்தது. அப்போது அங்கு பதுங்கி இருந்த பாலஸ்தீனிய ஆயுதக்குழுவினர் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேலிய பாதுகாப்பு படையினரும் பதிலடி தாக்குதல் நடத்தினர். இரு தரப்புக்கும் இடையே துப்பாக்கிச்சூடு நடந்த நிலையில் இந்த தாக்குதலில் பாலஸ்தீனிய ஆயுதக்குழுவினர் 10 பேர் உயிரிழந்தனர். மேலும், 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
ஜெனின் பகுதியில் இஸ்ரேலிய ராணுவ நடவடிக்கை 2வது நாளாக இன்றும் நீடித்து வருகிறது. இதனால், இஸ்ரேல் பாலஸ்தீனம் இடையே மீண்டும் பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது.
இந்நிலையில், இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் இன்று கார் மற்றும் கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டது. காரில் வந்த நபர் டெல் அவிவ் பகுதியில் சாலையோரம் நின்றுகொண்டிருந்தவர்கள் மீது சரமாரியாக மோதினார். பின்னர், தான் வைத்திருந்த கத்தியால் அங்கிருந்தவர்கள் மீது சரமாரியாக குத்தினார். கத்திக்குத்து, கார் தாக்குதலில் இஸ்ரேலியர்கள் 8 பேர் படுகாயமடைந்தனர்.
இந்த தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து விரைந்து சென்ற போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமத்தினர். மேலும், தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச்சென்ற நபரையும் தீவிரமாக தேடு வருகின்றனர்.
இந்த தாக்குதலை நடத்தியது மேற்குகரை பகுதியை சேர்ந்த பாலஸ்தீனியர் என்பது தெரியவந்துள்ளது. இந்த தாக்குதலை மேற்குகரையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழு பாராட்டியுள்ளது. மேலும், ஜெனின் பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு இது முதல் பதிலடி என்றும் ஹமாஸ் தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதலையடுத்து இஸ்ரேல் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், ஜெனின் பகுதியில் இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் ராணுவ நடவடிக்கையை மேலும் தீவிரப்படுத்தலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையே மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது.