காலிஸ்தான் ஆதரவாளர்களால் இந்திய தூதரத்திற்கு தீ வைப்பு: அமெரிக்கா கடும் கண்டனம்

வாஷிங்டன்,

அமெரிக்காவின் சான்-பிரான்சிஸ்கோ நகரில் இந்தியாவின் துணை தூதரகம் அமைந்துள்ளது. இந்த தூதரகத்திற்கு கடந்த 2ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலிஸ்தான் ஆதரவாளரகள் தீ வைத்ததாக கூறப்படுகிறது. இந்த தீவைப்பு சம்பவத்தின் வீடியோ காட்சி தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2ம் தேதி நள்ளிரவில் மர்ம நபர் ஒருவர் துணை தூதரகத்தை எரிபொருளை ஊற்றி எரித்துள்ளார். இதனால், அப்பகுதி முழுக்க கொழுந்துவிட்டு எரிந்த தீயால் புகை மண்டலமாக காட்சி அளித்தது. இதன் பின்னர் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்த தீ வைப்பு சம்பவத்தில் உயிரிழப்புகள் இல்லை என தகவல் வெளியாகியுள்ளது. காலிஸ்தானி ஆதரவாளர்களால் கடந்த 5 மாதங்களில் இந்திய தூதரகம் மீதான இரண்டாவது தாக்குதல் என கூறப்படுகிறது. இந்திய தூதரகத்திற்கு எதிராக அறிவிக்கப்பட்ட நாசவேலை மற்றும் தீவைப்பு முயற்சியை அமெரிக்கா வன்மையாக கண்டிக்கிறது என்று அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.