ஒடிஷாவின் பலாசோரில் கடந்த மாதம் 2-ம் தேதி அடுத்தடுத்து மூன்று ரயில்கள் மோதிக்கொண்ட விபத்தில் 291 பேர் உயிரிழந்தனர். இதில் 900 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து நடந்து சரியாக ஒரு மாதம் ஆன நிலையில் தற்போது விபத்துக்கான காரணம் குறித்த அறிக்கையை மத்திய ரயில்வே அமைச்சகத்திடம் சமர்பித்துள்ளது ரயில்வே பாதுகாப்புத்துறை.
விபத்து தொடர்பாக கடந்த ஒரு மாதமாக நடந்து வந்த விசாரணையின் முடிவில் பலாசோர் விபத்துக்கு மனித தவறே காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பஹானாகா பஜார் ரயில் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட சிக்னலிங் சர்க்யூட் மாற்றத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக கோரமண்டல் எக்ஸ்பிரஸுக்கு தவறான சிக்னல் அளிக்கப்பட்டுள்ளது என விசாரணை மேற்கொண்ட ரயில்வே பாதுகாப்பு கமிஷனர் சௌத்ரி கூறியுள்ளார்.
ரயில் 12841 (ஷாலிமார்-சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ்)-க்கு பஹானாகா ரயில் நிலையத்தில் UP மெயில் லைனில் இயக்கத்திற்கு பச்சை சமிக்ஞை காட்டப்பட்டது. ஆனால் கிராஸ்ஓவர் 17 A/B ஆனது UP லூப் லைனுக்கு அமைக்கப்பட்டது. இதனால் ரயில் லூப் லைனில் சென்று சரக்கு ரயிலின் பின்புறம் மோதி விபத்துக்குள்ளானது. அதன் தொடர்ச்சியாக ரயில் எண் 12864 யஷ்வந்த்பூர்-ஹவுரா எக்ஸ்பிரஸுக்கும் இதே போன்று தவறு நடந்ததால் அதுவும் விபத்துக்குள்ளாகியுள்ளது.
ரயில்வே அமைச்சகம் மற்றும் ரயில்வே வாரியத்திடம் 40 பக்க அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் இன்னும் இந்த அறிக்கையை ரயில்வே வாரியம் ஏற்கவில்லை. அறிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டால் அறிக்கையில் இருந்து பெறப்பட்ட பல பரிந்துரைகள் மீது பல்வேறு துறைகளில் நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறபட்டுள்ளது. அதேபோல் விபத்து அன்று பணியில் இருந்த ஸ்டேஷன் மாஸ்டர் உள்பட கண்காணிப்பு ஊழியர்களின் குற்றவியல் அலட்சியம் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று கூறப்பட்டுள்ளது.