பெங்களூரு, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வீட்டில் பறிமுதல் செய்த பொருட்களில், 30 கிலோ நகைகள் மட்டுமே உள்ளதால், பட்டியலில் உள்ள மீதி 28 பொருட்களை ஒப்படைக்கும்படி பெங்களூரு சமூக ஆர்வலர் நரசிம்மமூர்த்தி, தமிழக லஞ்ச ஒழிப்பு துறைக்கு கடிதம் எழுதி உள்ளார்.
மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில், அவரது வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள், வழக்கு நடந்த மாநிலமான கர்நாடகாவில் உள்ள அரசு கருவூலத்தில் வைக்கப்பட்டு இருந்தன.
வழக்கு முடிந்து, குற்றவாளிகள் தண்டிக்கப்பட்ட நிலையில், ‘ஜெயலலிதா வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களில், விலை உயர்ந்த புடவைகள், சால்வைகள், செருப்புகள் உட்பட, 28 வகையான பொருட்களை ஏலம் விட்டு அதில் கிடைக்கும் பணத்தை, கர்நாடக அரசு கருவூலத்தில் சேர்க்க வேண்டும்’ என, பெங்களூரை சேர்ந்த சமூக ஆர்வலர் நரசிம்மமூர்த்தி, பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இதையடுத்து, ஜெயலலிதாவின் பொருட்களை ஏலம் விட, கிரண் ஜவளி என்ற அரசு வக்கீலை, கர்நாடக அரசு நியமித்தது. இதற்கிடையில், ஜெயலலிதாவின் அண்ணன் பிள்ளைகளான தீபா, தீபக் ஆகியோர், பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை தங்களிடம் ஒப்படைக்கும்படி, சிறப்பு நீதிமன்றத்தில் தனித்தனியாக மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனு மீது நீதிபதி மோகன் முன்னிலையில் சமீபத்தில் விசாரணை நடந்தது. அப்போது, ‘பறிமுதல் செய்த பட்டியலில் 29 வகையான பொருட்கள் உள்ளன.
‘இதில், வரிசை எண் 28ல் உள்ள தங்கம், வைரம், வைடூரியம், பவளம், முத்து உட்பட 30 கிலோ நகைகள் மட்டுமே உள்ளன. மற்ற பொருட்கள் இல்லை’ என நீதிபதி தெரிவித்து, விசாரணையை வரும் 12ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
இதையடுத்து, பறிமுதல் செய்த பட்டியலில் உள்ள மற்ற 28 வகை பொருட்களை நீதிமன்றத்தில் ஒப்படைக்கும்படி, சென்னை ஆலந்துாரில் உள்ள தமிழக லஞ்ச ஒழிப்பு இயக்குனரக எஸ்.பி.,க்கு, சமூக ஆர்வலர் நரசிம்மமூர்த்தி கடிதம் எழுதி உள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்