பாட்னா: நீண்ட இடைவெளிக்குப் பிறகு பிஹார் முதல்வர் நிதிஷ் குமார், மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் சிங்கை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பு ஒன்றரை மணி நேரத்துக்கும் மேலாக நீடித்தது.
நில மோசடி வழக்கில் ராஷ்ரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) தலைவரும், பிஹாரின் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இந்த சூழ்நிலையில், ஹரிவன்ஷை நிதிஷ் குமார் திங்கள்கிழமை சந்தித்துப் பேசியுள்ளது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இந்த சந்திப்பின் பின்னணியில் பாஜக உள்ளதாக ஊகங்கள் வெளியான நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவிக்க ஹரிவன்ஷ் மறுத்துவிட்டார்.
ஐக்கிய ஜனதா தள கட்சியின் தலைவர் நிதிஷ் குமார் கடந்த 5 நாட்களாக அக்கட்சியின் எம்எல்ஏ, எம்பி, எம்எல்சி களை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். அந்த வகையில், மாநிலங்களவை உறுப்பினர் என்ற முறையில் நிதிஷ் குமார், ஹரிவன்ஷை சந்தித்துப் பேசியுள்ளதாக அவரது நெருங்கிய உதவியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவில் ராஷ்டிரிய ஜனதாதளம் உள்ளிட்ட பல எதிர்க்கட்சிகள் கலந்து கொள்ளாமல் புறக்கணிப்பதாக அறிவித்தன. ஆனாலும், அந்த விழாவில் ஐக்கிய ஜனதா தள கட்சியைச் சேர்ந்த ஹரிவன்ஷ் கலந்து கொண்டது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியது. அவர், ஐக்கிய ஜனதா தளத்தில் அதிருப்தி தலைவராக செயல்படுவதாக கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த சந்திப்பு குறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் நிகில் ஆனந்த் கூறுகையில், ‘‘ஹரிவன்ஷ் மாநிலங்களவையின் துணைத் தலைவர். ஆனால், அதற்கு முன்பு அவர் நம்பகமான பத்திரிகையாளராகவும், கருத்தியல் மற்றும் தார்மீக ரீதியாக அர்ப்பணிப்புள்ள நபராகவும் விளங்கியவர். அவர் அரசியல் சாசனப் பதவியை வகிக்கிறார் என்பதும் , விதிகளைப் பின்பற்றி வருகிறார் என்பதும் பாஜகவுக்கு தெரியும். நாங்கள் அவரை மிகவும் மதிக்கிறோம்’’ என்று தெரிவித்தார்.
தேஜஸ்வி ஊழல் வழக்கில் சிக்கி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் நிதிஷ் மீண்டும் இணைய திட்டமிட்டே இந்த சந்திப்பு நடைபெற்றதாக அரசியல் பார்வையாளர்களில் ஒருசாரார் கருத்து தெரிவித்துள்ளனர்.