நீலகிரி: கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசைக் காற்றில் வேகமாறுபாடு நிலவுவதால் தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் இன்று முதல் வரும் 9-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இன்று நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை மையம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் கனமழை காரணமாக, நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (ஜூலை 06) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நேற்று உதகை, குந்தா, கூடலூர், பந்தலூர் ஆகிய 4 தாலுக்காக்களுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலை மாவட்டம் முழுவதுமுள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
அதேபோல் கோவை மாவட்டம் வால்பாறை வட்டத்திலுள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.