ஜோகனர்ஸ்பர்க்: தென் ஆப்பிரிக்காவின் ஜோகனர்ஸ்பர்க் மாகாணத்தின் போக்ஸ்பர்க் பகுதியில் நைட்ரேட் ஆக்சைடு வாயு கசிந்ததில் 16 பேர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தென் ஆப்பிரிக்காவின் ஜோகனர்ஸ்பர்க் மாகாணம் போக்ஸ்பர்க் நகரில் குடியிருப்பு பகுதி உள்ளது. இங்கு சுரங்க வேலைகளில் ஈடுபடுபவர்களுக்கான தற்காலிக குடியிருப்புகளும் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், அந்த குடியிருப்பு பகுதியில் நேற்று திடீரென வாயு கசிவு ஏற்பட்டது. இந்த வாயுவை சுவாதித்த 24 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியானது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டனர். வாயு கசிவால் மயக்கமடைந்த சுமார் 10க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தொடர்ந்து, வாயு கசிவுக்கான காரணம் குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
காவல்துறை மற்றும் உள்ளூர் அரசு அதிகாரிகளின் கூற்றுப்படி, உரிமம் பெறாத சுரங்கத் தொழிலாளர்கள், தங்கத்தை சுத்திகரிக்க பயன்படுத்தியபோது அபாயகரமான நைட்ரேட் வாயு கசிவு ஏற்பட்டதில் மூன்று குழந்தைகள் உட்பட 16 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
“சம்பவ இடத்தில் 16 பேர் இறந்துவிட்டதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் மருத்துவர்களின் வருகைக்குப் பிறகு, வாயு கசிவால் மயக்கமடைந்த சிலரை உயிர்ப்பிக்க முடிந்தது, அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்” என்று அவசர சேவை செய்தித் தொடர்பாளர் வில்லியம் என்ட்லாடி தெரிவித்துள்ளதாக அல் ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது.
மருத்துவமனையில் உள்ளவர்களில், நான்கு பேர் மோசமான நிலையில் உள்ளனர், 11 பேர் தீவிர சிகிச்சையில் உள்ளனர். ஒருவர் ஓரளவுக்கு நிலையாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களில் 5 பெண்களும் மூன்று குழந்தைகளும் அடங்குவர் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
உண்மையான உயிரிழப்புகளின் எண்ணிக்கையைக் கண்டறிய பாதிக்கப்பட்ட முழு பகுதியையும் நாங்கள் மும்முரமாகச் சரிபார்த்து வருகிறோம் என்றும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாகவும் வில்லியம் என்ட்லாடி கூறியுள்ளார்.
இதே பகுதியில் கடந்த ஆண்டு கிறிஸ்துமஸ் ஈவ் அன்று ஒரு பெரிய எரிவாயு டேங்கர் வெடித்ததில் 41 பேர் கொல்லப்பட்டனர். திரவ பெட்ரோலிய வாயுவை (எல்பிஜி) ஏற்றிச் சென்ற டிரக் ஒரு பாலத்தின் கீழ் சிக்கியது. அதைப் பார்க்க ஏராளமான மக்கள் அங்கு சென்றபோது, டேங்கர் வெடித்ததில் 41 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.