பிரதமர் நரேந்திர மோடி வரும் 7ஆம் தேதி சத்தீஸ்கர், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும், 8ஆம் தேதி தெலங்கானா மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களிலும் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதில் சத்தீஸ்கர், தெலங்கானா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களுக்கு நடப்பாண்டு இறுதியில் சட்டமன்ற தேர்தல் வரவுள்ளது. அடுத்த ஆண்டு மே மாதத்தில் மக்களவை தேர்தல் நடக்கிறது. இதற்காக மாநில கட்சிகள் முதல் தேசிய கட்சிகள் வரை காய் நகர்த்தி வருகின்றன.
பிரதமர் மோடி சுற்றுப்பயணம்
இந்நிலையில் பிரதமர் மோடியின் 4 மாநில சுற்றுப்பயணம் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இதில் சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் 7,500 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை நாட்டிற்கு அர்ப்பணித்து அடிக்கல் நாட்டுகிறார். குறிப்பாக 5 தேசிய நெடுஞ்சாலை திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்படுகிறது. இதையடுத்து கோரக்பூரில் கீதா பதிப்பகம் நூற்றாண்டு நிறைவு விழாவில் பிரதமர் பங்கேற்கவுள்ளார்.
வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்
கோரக்பூர் – லக்னோ மற்றும் ஜோத்பூர் – அகமதாபாத் (சபர்மதி) ஆகியவற்றை இணைக்கும் இரண்டு வந்தே பாரத் ரயில்களை பிரதமர் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். கோரக்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்புக்கு பிரதமர் அடிக்கல் நாட்டுவார். வாரணாசியில் 12,100 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டவுள்ளார்.
வாரணாசி டூ ஜான்பூர் 4 வழிப்பாதை
பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா சந்திப்பு அர்ப்பணிக்கப்பட்ட சரக்கு வழித்தடத்தின் சோன் நகர் ரயில் பாதை ஆகியவற்றை பிரதமர் தொடங்கி வைக்கிறார். வாரணாசியில் இருந்து லக்னோவுக்கு எளிதாகவும், விரைவாகவும் பயணம் செய்யும் வகையில் NH-56ல் வாரணாசி – ஜான்பூர் பிரிவில் நான்கு வழிப்பாதை விரிவாக்கத்தை பிரதமர் நாட்டிற்கு அர்ப்பணிக்கிறார். மணிகர்னிகா மற்றும் ஹரிச்சந்திரா மலைத்தொடரை மறுசீரமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டுவார்.
ஆயுஷ்மான் அட்டைகள்
உத்தரப் பிரதேசத்தில் உள்ள பயனாளிகளுக்கு பிரதமரின் ஸ்வநிதி கடன்கள், பிரதமர் வீட்டுவசதித் திட்ட கிராமப்புற வீடுகளின் சாவிகள் மற்றும் ஆயுஷ்மான் அட்டைகளைப் பிரதமர் விநியோகிக்க உள்ளார். வாரங்கலில் 6,100 கோடி ரூபாய் மதிப்பிலான சாலைகள் மற்றும் ரயில் உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவார். பிகானீரில் 24,300 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் அர்ப்பணித்து அடிக்கல் நாட்டுவார்.
பசுமை விரைவு சாலை
அமிர்தசரஸ் – ஜாம்நகர் பொருளாதார வழித்தடத்தின் ஆறு வழி பசுமை விரைவுச் சாலைப் பகுதியையும், பசுமை எரிசக்தி வழித்தடத்திற்கு மாநிலங்களுக்கு இடையே கொண்டு செல்லும் குழாய் பாதையின் முதல் கட்டத்தையும் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிப்பார். அதுமட்டுமின்றி பிகானீர் ரயில் நிலைய மறுசீரமைப்புக்குப் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்.