மகாராஷ்டிராவில் திடீர் திருப்பமாக தேசியவாத காங்கிரஸ் கட்சியிலிருந்து அஜித் பவாரும், அவருடைய ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 8 பேரும் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அமைச்சரவையில் சேர்ந்திருக்கின்றனர். அஜித் பவார் வருகை மகாராஷ்டிராவில் ஆட்சியிலுள்ள பா.ஜ.க கூட்டணி அரசில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஏக்நாத் ஷிண்டேயும், அவருடைய ஆதரவாளர்களும் சிவசேனாவிலிருந்து வெளியில் வரும்போது, உத்தவ் தாக்கரே தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி சேர்ந்ததால்தான், வெளியில் வந்ததாகச் சொன்னார்கள். இப்போது பா.ஜ.க அரசில் தேசியவாத காங்கிரஸ் தலைவர்களும் சேர்ந்திருக்கின்றனர் . இதனை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் ஏக்நாத் ஷிண்டே திணறி வருகிறார்.
ஏற்கெனவே ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவைச் சேர்ந்த எம்.எல்.ஏ-க்கள், இது குறித்து தங்களது அதிருப்தியை வெளிப்படையாகவே தெரிவித்திருக்கின்றனர். அதோடு தேசியவாத காங்கிரஸ் கட்சியிலிருந்து வந்திருப்பவர்கள் அனைவரும் மிகவும் அனுபவசாலிகள். அவர்கள் ஒவ்வொருவரும் தங்களது மாவட்டத்தில் மிகவும் சக்தி வாய்ந்தவர்களாக இருக்கின்றனர். அவர்களை எதிர்த்து சிவசேனா தலைவர்களால் அரசியல் செய்வது என்பது முடியாத காரியமாகும்.
அதோடு உத்தவ் தாக்கரேயிடமிருந்து வெளியில் வரும்போது அனைத்து எம்.எல்.ஏ-க்களுக்கும், அமைச்சர் பதவி அல்லது வேறு எதாவது ஒரு பதவி கொடுப்பதாக வாக்குறுதி கொடுக்கப்பட்டது. ஆனால் இதுவரை 10 எம்.எல்.ஏ-க்களுக்கு மட்டுமே அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டிருக்கிறது. மற்றவர்களுக்கு எந்தப் பதவியும் கொடுக்கப்படவில்லை. அமைச்சரவை விரிவுபடுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அஜித் பவார் உள்ளே நுழைந்துவிட்டார். இதனால் அடுத்த அமைச்சரவை விரிவாக்கம் எப்போது என்று கேள்வி எழுந்திருக்கிறது.
நேற்று முன்தினம் இது குறித்து முதல்வர் ஷிண்டே அளித்தப் பேட்டியில், “இன்னும் ஒரு வாரத்தில் அமைச்சரவை விரிவுபடுத்தப்படும்” என்று குறிப்பிட்டிருந்தார். ஆனால் அது நடைபெறுமா என்பது சந்தேகம்தான் என்று சிவசேனா தலைவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.
இந்தப் பிரச்னைகளால் ஏக்நாத் ஷிண்டே நேற்று மாலை தன்னுடைய ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தைத் தனது வீட்டில் கூட்டியிருந்தார். இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட எம்.எல்.ஏ-க்கள், `அஜித் பவார் இருக்கும் கூட்டணியில் நாம் இருக்கக் கூடாது’ என்று தெரிவித்தனர். `என்ன காரணத்தைச் சொல்லி சிவசேனாவிலிருந்து வெளியில் வந்தோமோ… இப்போது அவர்களுடனே மீண்டும் கூட்டணி வைக்கவேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது’ என்பதை எம்.எல்.ஏ-க்கள் சுட்டிக்காட்டினர். `பால் தாக்கரே ஒருபோதும் தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்ததில்லை’ என்றும் எம்.எல்.ஏ-க்கள் தெரிவித்தனர்.
அவர்களை வெறுப்பேற்றும்விதமாக ஏக்நாத் ஷிண்டே, `இதற்கு முன்பு தேசியவாத காங்கிரஸ் கட்சியால்தான், நாங்கள் சிவசேனாவிலிருந்து விலகினோம்’ என்று பேசும் வீடியோவை வெளியிட்டு, `இப்போது என்ன செய்யப்போகிறீர்கள்’ என்று கேட்டு, உத்தவ் தாக்கரே தரப்பினர் ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர். இரண்டு மாதங்களுக்கு முன்புதான், `அரசில் தேசியவாத காங்கிரஸ் கட்சி சேர்ந்தால், நாங்கள் அதில் இருக்க மாட்டோம்’ என்று ஏக்நாத் சிவசேனாவினர் குறிப்பிட்டிருந்தனர்.
அஜித் பவார் அமைச்சரவையில் சேர்ந்தது குறித்து, ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவைச் சேர்ந்த கஜானன் கீர்த்திகர் அளித்தப் பேட்டியில், “அமைச்சரவையில் தேசியவாத காங்கிரஸ் சேர்ந்த பிறகு, சிவசேனா எம்.எல்.ஏ-க்களுக்கு அமைச்சர் பதவிக்கான வாய்ப்புகள் குறைந்திருக்கின்றன. இதனால் சில எம்.எல்.ஏ-க்கள் அதிருப்தியில் இருக்கின்றனர்.
இதனை முதல்வர் ஷிண்டேயும் அறிவார்” என்றார். ஏற்கெனவே சிவசேனா எம்.எல்.ஏ-க்கள் 16 பேரின் பதவியைப் பறிக்கவேண்டும் என்று கோரி, மாநில சபாநாயகரிடம் உத்தவ் தாக்கரே தரப்பில் மனுக்கொடுக்கப்பட்டிருக்கிறது.
அஜித் பவாரின் வரவால் பதவி பறிப்பு மனுமீது முடிவெடுக்கப்படும்போது, தங்களுக்குப் பாதிப்பு ஏற்படலாம் என்று ஏக்நாத் ஷிண்டே தரப்பினர் கருதுகின்றனர். இப்போது பா.ஜ.க ஆட்சியில் தொடர சிவசேனாவை முழுமையாக நம்பியிருக்கவேண்டிய சூழ்நிலை இல்லை. எனவே சிவசேனா கேட்கும் கோரிக்கைகளுக்கு பா.ஜ.க பெரிய அளவில் முக்கியத்துவமும் கொடுக்காது என்று, ஷிண்டே ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் அவரிடம் புகார் தெரிவித்திருக்கின்றனர். இந்தப் பிரச்னையால் சிவசேனா எம்.எல்.ஏ-க்கள் 15 பேர் மீண்டும் உத்தவ் தாக்கரேயிடம் செல்வது குறித்தும் ஆலோசித்து வருவதாக, அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.