ஜெய்ப்பூர்: பிகானேரில் காணாமல் போன 17 வயது சிறுமி, முஸ்லிம் ஆசிரியையுடன் ஓட்டம் பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர்களை போலீசார் சென்னையில் பிடித்துள்ளனர்.
இந்தியாவில் 18 வயதை அடைந்த பின்னரே ஒருவர் மேஜராக கருதப்படுவார். 18 வயதுக்குக் கீழான குழந்தைகள் அவர்களின் பெற்றோரின் கவனிப்பின் கீழாகவே இருப்பார்கள்.
அதாவது 18 வயதுக்குக் கீழ் உள்ள குழந்தைகள் எந்தவொரு முடிவை எடுத்தாலும், பெற்றோரின் ஒப்புதல் தேவை. இல்லையென்றால் அது சட்டப்பூர்வமாகக் கருதப்படாது. நமது இந்தியாவில் age of consent எனப்படும் பாலியல் உறவுக்கான சட்டப்பூர்வ வயதும் 18ஆகவே இருப்பது குறிப்பிடத்தக்கது.
ராஜஸ்தான்: இதற்கிடையே ராஜஸ்தான் மாநிலத்தில் அதுபோன்ற ஒரு சம்பவம் தான் அரங்கேறியுள்ளது. கடந்த சனிக்கிழமை ராஜஸ்தானின் பிகானேர் என்ற இடத்தில் வசித்து வந்த 17 வயது சிறுமி மாயமானார். இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்த போலீசார் விசாரணையை ஆரம்பித்தனர். அந்த சிறுமி, பெண் ஆசிரியை ஒருவருடன் இணைந்து வீட்டை விட்டு வெளியேறியதைக் கண்டுபிடித்தனர்.
இதற்கிடையே வீட்டை விட்டு வெளியேறிய பிறகு சில நாட்கள் கழித்து இருவரும் ஆன்லைனில் வீடியோ ஒன்றை வெளியிட்டனர். தான் விருப்பப்பட்டே வீட்டில் இருந்து வெளியேறியதாகக் குறிப்பிட்ட அந்த சிறுமி, இருவரும் காதலிப்பதாகவும், ஒன்றாக இருக்க விரும்புவதாகவும் தெரிவித்தார். அந்த சிறுமி மைனர் என்பதால் விசாரணையைத் தீவிரப்படுத்திய போலீசார், இருவரின் நடவடிக்கையைத் தொடர்ந்து கண்காணித்தனர்.
சென்னையில் கைது: அவர்கள் சென்னையில் இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், சென்னை போலீசாரின் உதவியுடன் நேற்று புதன்கிழமை ராஜஸ்தான் போலீசார் இருவரையும் பிடித்தனர். சென்னையில் இருந்து அவர்களை ராஜஸ்தானுக்கு அழைத்துச் செல்லும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்தச் சம்பவத்திற்கு மாணவியின் உறவினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
ஆசிரியைக்கும் மாணவிக்கும் இடையே இருக்கும் உறவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் போராட்டம் நடத்தினர் மற்றும் அவரது மாணவியின் உறவுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். சிறுமியின் உறவினர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளதால் அங்கே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
லவ் ஜிகாத் புகார்: அந்த மாணவியின் குடும்பத்தினர் இதனையும் ‘லவ் ஜிஹாத்’ என்று குறிப்பிட்டுள்ளனர். இதனால் அங்கே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில், அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க அங்கே பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ராஜஸ்தான் பாஜக எதிர்க்கட்சித் தலைவர் ராஜேந்திர ரத்தோர், இந்தச் சம்பவத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.அந்த சிறுமி கடத்தப்பட்டிருக்கலாம் எனத் தெரிவித்தனர்.
இதனால் அங்கே ஒரு வித பதற்றமான சூழல் ஏற்பட்டது. போலீசார் விசாரணையை நடத்தி வந்த போது தான், அந்த சிறுமியும் ஆசிரியையும் இணைந்து 4 நிமிட வீடியோ ஒன்றை வெளியிட்டனர். அதில் அந்த மைனர் சிறுமி இருவரும் காதலிப்பதாகவும் தங்கள் சொந்த விருப்பப்படி வீட்டை விட்டு வெளியேறியதாகவும் தெரிவித்திருந்தனர்.
தன்பால் ஈர்ப்பாளர்கள்: மேலும் அந்த வீடியோவில், “நாங்கள் இருவரும் தன்பால் ஈர்ப்பாளர்கள்.. எங்களால் வேறு யாரையும் திருமணம் செய்ய முடியாது.. எனவே நாங்கள் வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்தோம். நாங்கள் இருக்கும் இடத்தை நீங்கள் கண்டு பிடித்தால், எங்கள் வாழ்க்கை முடிந்துவிடும். எங்களைப் பிரிக்காதீர்கள். விட்டுவிடுங்கள். யார் மீதும் இதில் வழக்குப் பதிவு செய்யத் தேவையில்லை. யாரும் என்ன கடத்தவில்லை. மேலும், ஏமாற்றி அழைத்துச் செல்ல நான் ஒன்றும் சின்ன பெண் இல்லை” எனக் குறிப்பிட்டார்.
அதே வீடியோவில் அந்த ஆசிரியை, “தேவையில்லாத கலவரங்களை உருவாக்காதீர்கள்… நாங்கள் மிகவும் பாதுகாப்பாக இருக்கிறோம், நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருப்போம், எங்களை விட்டுவிடுங்கள்” என்று அவர் கூறியிருந்தார்.