பழங்குடியின இளைஞருக்கு கொடுமை… காலை கழுவி, சாப்பாடு ஊட்டி… ம.பி.,யில் நடந்த நெகிழ்ச்சி!

மத்திய பிரதேச மாநிலத்தில் இவ்வளவு கீழ்த்தரமான நிகழ்வு நடைபெறும் என யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். மனித மிருகம், மனிதனாக இருக்கவே தகுதியற்ற நபர் என்றெல்லாம் சமூக வலைதளங்களில் பலரும் கொந்தளித்து வருகின்றனர். அதுவும் பாஜகவை சேர்ந்த ஒருவர் இப்படிப்பட்ட காரியத்தில் ஈடுபட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சிக்கிய பிரவேஷ் சுக்லா

அதாவது, பாஜக எம்.எல்.ஏவின் பிரதிநிதியாக இருக்கும் பிரவேஷ் சுக்லா, சாலையோரம் அமர்ந்திருந்த பழங்குடியினத்தை சேர்ந்த நபர் மீது மதுபோதையில் சிறுநீர் கழித்துள்ளார். இதுதொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியான நிலையில் பலரும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

தேசிய அளவில் சர்ச்சை

இந்த சம்பவம் தேசிய அளவில் பூதாகரமாக வெடித்தது. கடுமையான சட்டப் பிரிவின் கீழ் கைது செய்து சிறையில் தள்ளுங்கள் எனக் கொந்தளிக்க தொடங்கினர். ட்விட்டரில் ஹேஷ்டேக் ஒன்று வைரலாகி சர்வதேச அளவில் இந்தியாவிற்கு பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் குற்றம்சாட்டப்பட்ட பிரவேஷ் சுக்லா மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது.

சிவராஜ் சிங் சவுகான் உத்தரவு

இதுதொடர்பாக மத்தியப் பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் உத்தரவு பிறப்பித்து விரைவாக நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார். அதன்பேரில் பிரவேஷ் சுக்லா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இவர் மீது ஐபிசி 294, 504, எஸ்.சி/ எஸ்டி வன்கொடுமை ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சட்டவிரோத வீடு இடிப்பு

மேலும் பிரவேஷ் சுக்லா சட்டவிரோதமாக கட்டியிருந்த வீட்டை இடிக்க உத்தவிடப்பட்டது. உடனடியாக உள்ளூர் நிர்வாகத்தால் இடித்தும் தள்ளப்பட்டது. இதற்கிடையில் மத்தியப் பிரதேசத்தில் மட்டுமின்றி நாடு முழுவதிலும் இருந்து எதிர்க்கட்சிகள் கண்டனக் குரல் எழுப்பி தொடங்கினர். இந்த சூழலில் பாதிக்கப்பட்ட தஷ்மத் ராவத் என்ற பழங்குடியின நபரை முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தனது வீட்டிற்கு அழைத்துள்ளார்.

கால்களை கழுவிய முதலமைச்சர்

அவரிடம், உங்களுக்கு நடந்த துயரத்தை வீடியோவில் பார்த்தேன். இதற்காக நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். பொதுமக்கள் அனைவரும் எனக்கு கடவுளை போன்றவர்கள் என்று கூறினர். இதையடுத்து தஷ்மத் ராவத்தின் கால்களை கழுவினார். மேலும் தனது கையால் சாப்பாடு ஊட்டினார்.

மரக்கன்றுகளை நட்டு வைத்தனர்

பின்னர் போபாலில் ஸ்மார்ட் சிட்டி பூங்காவை தஷ்மத் ராவத் உடன் முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் நேரில் பார்வையிட்டார். அங்கு இருவரும் மரக்கன்றுகள் நட்டு வைத்தனர். மத்தியப் பிரதேச முதலமைச்சரின் செயலுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். மேற்கண்டவாறு குற்றச் செயல்களில் யாரும் ஈடுபடக் கூடாது என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.