`நான் சொல்லும் படத்தில் மட்டும் நடிக்கணும்!' – மிரட்டிய தந்தை; இன்ஸ்டாவில் வீடியோ பதிவிட்ட நடிகை

‘Seethamma Andalu Ramayya’ என்ற தெலுங்கில் படத்தின் அறிமுகமாகமானவர் மலையாள நடிகை அர்த்தனா பினு.

தமிழில் சமுத்திரக்கனியின் ‘தொண்டன்’, ஜி.வி.பிரகாசின் ‘செம’, கார்த்தியின் ‘கடைக்குட்டி சிங்கம்’ மற்றும் ‘வெண்ணிலா கபடி குழு 2’ ஆகிய படங்களின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர்.

இவரது தந்தை விஜயகுமார், மற்றும் தாய் பினு டேனியல் இருவரும் விவாகரத்து பெற்றுக் கொண்டனர். இதையடுத்து நடிகை அர்த்தனா பினு, தாய் பினு டேனியல், சகோதரி மற்றும் பாட்டியுடன் வசித்து வருகிறார். நீண்ட நாட்களாகவே இவர்களுக்கும் விஜயகுமாருக்கும் சிறுசிறு பிரச்னைகள் இருந்து வந்தது.

நடிகை அர்த்தனா பினு மற்றும் அவரது தந்தை விஜயகுமார்.

இந்நிலையில் தற்போது நடிகை அர்த்தனா பினு, தன் தந்தை அத்துமீறி வீட்டிற்குள் நுழைந்து அச்சுறுத்துவதாகவும், சினிமாவில் நடிக்க கூடாது, அப்படியே நடிப்பதாலும் தான் சொல்லும் படங்களில் மட்டுமே நடிக்க வேண்டும் என்று மிரட்டி வருதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாகத் தன் தந்தை வீட்டிற்குள் அத்துமீறி நுழையும் வீடியோ ஒன்றினைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள அர்த்தனா பினு, தன் தந்தை தன்னை மிரட்டி வருவதாக நீண்ட பதிவினை பதிவிட்டுள்ளார். அதில், “என் தந்தை என் வீட்டில் அத்துமீறி நுழைந்து மிரட்டுகிறார். நாங்கள் காலை 9:45 மணியளவில் காவல் நிலையத்திற்கு உதவி கேட்டும் இதுவரை யாரும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் இந்தப் பதிவை இங்கு பதிவிடுகிறேன்.

இந்த வீடியோவில் இருப்பவர் மலையாளத் திரைப்பட நடிகரான எனது தந்தை விஜயகுமார். எனக்கும், என் அம்மாவுக்கும், என் தங்கைக்கும் ஆதரவாக சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பே பாதுகாப்பு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தும், சொத்துக்காக எங்கள் வீட்டில் அத்துமீறி சுவர் ஏறி குதித்துத் திரும்பச் செல்வதை இந்தக் காணொளியில் காணாலாம்.

எனது பெற்றோர் சட்டப்பூர்வமாக விவாகரத்து பெற்றவர்கள், நானும் எனது அம்மாவும் எனது சகோதரியும் 85+ வயதுடைய எனது தாய்வழி பாட்டியுடன் எங்கள் தாய் வீட்டில் வசித்து வருகிறோம். இருப்பினும் என் தந்தை பல ஆண்டுகளாக அத்துமீறி நுழைந்து வருகிறார். அதுமட்டுமின்றி அவர் மீது பல போலீஸ் வழக்குகள் உள்ளன.

இந்நிலையில் இன்று அவர் எங்கள் வீட்டிற்குள் நுழைந்தார். கதவு பூட்டப்பட்டிருந்ததால் ஜன்னல் வழியாக அவர் எங்களை மிரட்டினார். என் தங்கையையும் பாட்டியையும் கொன்றுவிடுவதாக மிரட்டினார். அந்த சமயத்தில் என்னதான் உங்களுக்குப் பிரச்னை என்று அவரிடம் பேசினேன். அப்போது அவர் என்னிடம், ‘படங்களில் நடிப்பதை நிறுத்த வேண்டும் என்றும் எனக்குக் கீழ்ப்படியாவிட்டால் எந்த எல்லைக்கும் நான் செல்வேன்’ என்றும் மிரட்டினார். மேலும், அப்படியே நடிக்க வேண்டும் என்றால் அவர் சொல்லும் படங்களில் மட்டுமே நடிக்க வேண்டும் என்றும் கூறினார்.

நான் இப்போது நடித்துள்ள படத்தின் எனது மலையாளப் படத்தின் படக் குழுவையும் அவர் மோசமாகப் பேசினார். எனது பணியிடத்திலும், என் அம்மாவின் பணியிடத்திலும் மற்றும் என் சகோதரியின் கல்வி நிறுவனத்திலும் அத்துமீறி நுழைந்து எங்களை மிரட்டியது தொடர்பாக அவர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரவுள்ளோம். அதனால், அவர் இப்படியெல்லாம் மிரட்டுகிறார். நான் மலையாளப் படத்தில் நடிக்கும்போதெல்லாம் என்னை நடிக்கவிடாமல் தடுக்கும்படி வழக்கு தொடர்ந்தார்.

நான் ஷைலாக் படத்தில் நடித்தபோது கூட, அவர் ஒரு சட்டப்பூர்வ வழக்கைத் தொடர்ந்தார். மேலும் படம் கிடப்பில் போடப்படுவதைத் தடுக்க, நான் என் விருப்பப்படி படத்தில் நடித்தேன் என்று அதிகாரப்பூர்வ சட்ட ஆவணத்தில் கையெழுத்திட வேண்டியிருந்தது. இதுபற்றி சொல்லவும், எழுதவும் இன்னும் நிறைய இருக்கிறது. இப்போதைக்கு இன்ஸ்டாகிராமில் இவ்வளவுதான் என்னால் எழுத முடியும். என் அம்மாவுக்கு கொடுக்க வேண்டிய பணம் மற்றும் தங்கத்தை மீட்டுத் தரக் கோரி அவர் மீது வழக்கும் நடந்து வருகிறது.

நடிக்க வேண்டும் என்பது என்னுடைய ஆசை. என் விருப்பப்படி மட்டுமே படங்களில் நடிக்கிறேன். எனது உடல்நிலை என்னை அனுமதிக்கும் வரை தொடர்ந்து நடிப்பேன்” என்று பதிவிட்டுள்ளார்.

இது மலையாள திரையுலகில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.