சென்னை: Leo (லியோ) லியோ படத்தின் க்ளைமேக்ஸ் குறித்து மிஷ்கின் பேசியிருப்பது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.
லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்துவருகிறார் விஜய். விக்ரம் படத்தின் மெகா ஹிட் லோகேஷ் கனகராஜ் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பை கொடுத்திருப்பதால் இந்தப் படத்தை ஒட்டுமொத்த கோலிவுட்டுமே எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறது. அதற்கு தகுந்தாற்போல் படத்தில் ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்துவருகின்றனர். படம் அக்டோபர் 19ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது.
நட்சத்திர படை: ஒரு படத்தில் மூன்று நட்சத்திரங்களை வைத்து சமாளிப்பதே பெரிய வேலை என்று டாக் ஓடிக்கொண்டிருக்கும் சூழலில் லியோவிலோ சஞ்சய் தத், அர்ஜுன், மன்சூர் அலிகான், மிஷ்கின், மாத்யூ தாமஸ், த்ரிஷா, மடோனா செபாஸ்டியன், அனுராக் காஷ்யப் என பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது. தனுஷும் ஒரு கேமியோ ரோலில் நடிக்கவிருப்பதாக புதிய தகவலும் வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.
இறுதிக்கட்ட ஷூட்டிங்: காஷ்மீரில் தொடங்கிய ஷூட்டிங் அதன் பிறகு சென்னையில் அவுட்டோரிலும், ஸ்டூடியோவிலும் நடந்துவந்தது. ஆதித்யராம் ஸ்டூடியோவில் செட் போடப்பட்டு 500க்கும் மேற்பட்டவர்கள் நடனம் ஆடிய நா ரெடிதான் பாடல் ஷூட் செய்யப்பட்டது. தற்போது திருப்பதியில் படத்தின் இறுதிக்கட்ட ஷூட்டிங் நடந்துவருகிறது. இன்னும் சில நாட்களில் ஷூட்டிங் முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தொடங்கவிருக்கின்றன.
கவனம் ஈர்த்த முதல் சிங்கிள்: விஜய் பிறந்தநாளையொட்டி கடந்த ஜூன் 22ஆம் தேதி நா ரெடிதான் பாடல் வெளியானது. அந்தப் பாடல் வரவேற்பையும், விமர்சனத்தையும் ஒருசேர சந்தித்தது. இருப்பினும் பாடலில் விஜய்யின் லுக்கும், நடனமும் பெரிதும் பேசப்பட்டது. எனவே அந்தப் பாடலை திரையில் பார்ப்பதர்கு ரசிகரள் பேரார்வத்துடன் உள்ளனர். அதேபோல் படத்தில் விஜய்க்கு இரண்டு கெட்டப்புகள் என்றும் தெரியவந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
உளறிய மிஷ்கின்: லியோ படத்தின் சிறு தகவலைக்கூட கசிய விடாமல் படக்குழு கவனமாக இருந்துவருகிறது. ஆனால் ஷூட்டிங் ஆரம்பித்த சில நாட்களிலேயே விழா ஒன்றில் கலந்துகொண்ட மிஷ்கின், “விஜய்க்கும் எனக்குமான சண்டைக்காட்சியை படமாக்கினார்கள். ரத்தம் தெறிக்க தெறிக்க ஒரு ஃபைட் சீன் அது” என்றார். அதேபோல் காஷ்மீர் ஷூட்டிங்கில் கலந்துகொண்டபோது பேக்கரி செட் ஒன்று போடப்பட்டிருந்தது அங்கு வைக்கப்பட்டிருந்த டேபிளில் ஏறி சென்றுதான் விஜய்யை சந்தித்தேன் என கூறியதன் மூலம் கதைப்படி காஷ்மீரில் விஜய் பேக்கரி வைத்திருக்கிறார் என்றும் ரசிகர்கள் கணிக்க ஆரம்பித்துவிட்டனர்.
மறுபடியும் மறுபடியும்: இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் லியோ படத்தின் க்ளைமேக்ஸ் குறித்து பேசியிருக்கிறார் மிஷ்கின். அந்தப் பேட்டியில், “லியோ’ படத்தின் கிளைமேக்ஸில் ஒரு பாக்ஸ் எடுத்து என்னை விஜய் அடிக்க வேண்டும். அப்போது சண்டை பயிற்சியாளரை அழைத்து விஜய் நான் மிஷ்கினை அடிக்க மாட்டேன் என்று கூறினார். பின்னர் நான் விஜய்யிடம் அடி தம்பி ஒன்றும் இல்லை என்று கூறினேன்.
அதற்கு விஜய் இல்லை அப்படி செய்தால் உங்களுக்கு காயம் ஏற்படும் என்று கூறினார். நீ அடித்துதான் ஆக வேண்டும் என்று நான் கூறிய பின்னர்தான் விஜய் அந்த சீனில் நடித்தார்” என்றார். இதனை கேள்விப்பட்ட ரசிகர்கள் என்ன மிஷ்கின் எல்லாத்தையும் இப்படி ஓபனா சொல்றீங்களே என கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.