பெங்களூருவில் இருந்து தார்வார் வந்த வந்தே பாரத் ரெயிலில் தனியார் நிறுவன ஊழியரிடம் திருட்டு

உப்பள்ளி:

பெங்களூருவில் இருந்து வடகர்நாடக மாவட்டமான தார்வாருக்கு வந்தேபாரத் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு பிரதமர் மோடி இந்த ரெயில் சேவையை தொடங்கி வைத்தார். பெங்களூருவில் இருந்து 5½ மணி நேரத்தில் தார்வார் செல்லும் இந்த ரெயிலுக்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு உள்ளது.

இந்த நிலையில் பாகல்கோட்டை மாவட்டம் பாதாமியை சேர்ந்த ஆனந்த் என்பவர் பெங்களூருவில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். அவர் நேற்று முன்தினம் பெங்களூருவில் இருந்து காலை 5.30 மணிக்கு புறப்படும் வந்தே பாரத் ரெயிலில் தார்வார் நோக்கி பயணம் செய்தார்.

அவர் பெங்களூருவில் ரெயிலில் ஏறியதும் அயர்ந்து தூங்கிவிட்டார். பின்னர் அந்த ரெயில் தாவணகெரே அருகே வந்தபோது எழுந்து பார்த்தார். அப்போது அவர் வைத்திருந்த பை மாயமாகி இருந்தது. இதனால் ஆனந்த் அதிர்ச்சி அடைந்தார். அந்த பையில் ரூ.3 லட்சம் மதிப்பிலான மடிக்கணினி, செல்போன் மற்றும் ரூ.20 ஆயிரம் ரொக்கம் வைத்திருந்தார்.

இதனால் யாரோ மர்மநபர்கள், ஆனந்த் தூங்கியதை சாதகமாக பயன்படுத்தி கொண்டு பையை திருடி சென்றது தெரியவந்தது. இதையடுத்து வந்தே பாரத் ரெயில் உப்பள்ளி ரெயில் நிலையத்துக்கு வந்தபோது, அவர் உப்பள்ளி ரெயில்வே போலீசில் புகார் அளித்தார்.

இதுகுறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து வந்தேபாரத் ரெயில் நின்று சென்ற ரெயில் நிலையங்களில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து வருகிறார்கள். மேலும் மர்மநபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

வந்தேபாரத் ரெயில் தொடங்கப்பட்டு இது முதல் திருட்டு என்பது குறிப்பிடத்தக்கது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.