கார்துாம்-சூடானில் குடியிருப்பு பகுதியில் அந்நாட்டு ராணுவம் நடத்திய வான்வழி தாக்குதலில், 22 பேர் கொல்லப்பட்டனர்.
வடக்கு ஆப்ரிக்க நாடான சூடானில், ராணுவ ஆட்சி நடந்து வருகிறது. இதற்கு எதிராக பல்வேறு கிளர்ச்சியாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த ஏப்ரலில், அந்நாட்டு ராணுவம் மற்றும் துணை ராணுவப் படையினர் இடையே மோதல் வெடித்தது.
இதையடுத்து, கார்துாம் உட்பட பல்வேறு இடங்களில் துப்பாக்கிச் சூடு மற்றும் குண்டுவீச்சு சம்பவங்கள் நடந்தன. பல்வேறு இடங்களில் நடந்த வன்முறை வெறியாட்டங்களுக்கு, இந்தியர் ஒருவர் உட்பட 200க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.
இந்தியா, அமெரிக்கா, சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகள், தங்கள் நாட்டினரை மீட்கவும், பொது மக்கள் நலன் கருதியும் போர் நிறுத்தத்திற்கு ஒத்துழைக்கும்படி, சூடானின் ராணுவ படைகளிடம் கோரிக்கை விடுத்தன.
மூன்று நாட்கள் போர் நிறுத்தப்பட்ட நிலையில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் அங்கிருந்து மீட்கப்பட்டனர். இதற்கிடையே, போர் நிறுத்தத்துக்கான உடன்பாடு இருதரப்பினர் இடையே எட்டப்பட்டாலும், அந்நாட்டின் பல பகுதிகளில் தாக்குதல்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன.
இந்நிலையில், தலைநகர் கர்துாம் அருகே உள்ள ஓம்துார்மன் பகுதியில், சூடான் நாட்டு ராணுவத்தினர் நேற்று நடத்திய வான்வழித் தாக்குதலில், 22 பேர் கொல்லப்பட்டனர். இதை, அந்நாட்டு சுகாதாரத் துறை அமைச்சகம் உறுதி செய்துள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement