சென்னை: Sivakarthikeyan (சிவகார்த்திகேயன்) சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் மாவீரன் படத்தில் வாய்ஸ் ஓவர் கொக்டுத்திருக்கும் ஹீரோ குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது.
சிவகார்த்திகேயன் கடைசியாக பிரின்ஸ் படத்தில் நடித்தார். தெலுங்கிலும் தனது மார்க்கெட்டை பலப்படுத்தும் கணக்கில் அந்தப் படத்தில் நடித்த அவருக்கு ரிசல்ட் பலத்த அடியை கொடுத்தது. அவரது படங்கள் வரிசையில் மோசமான படம் என்ற பெயரை பெற்றது பிரின்ஸ். திரையிடப்பட்ட ஒரே வாரத்தில் திரையரங்குகளில் இருந்து படம் தூக்கப்பட்டதால் கொஞ்சம் ஆடித்தான் போனார்கள் எஸ்கே ரசிகர்கள்.
டாக்டர் மற்றும் டான்: பிரின்ஸ் படத்துக்கு முன்னதாக நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் வெளியான டாக்டர், சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் வெளியான டான் ஆகிய இரண்டு படங்களும் நூறு கோடி க்ளப்பில் இணைந்தன. இதனால் அதே ஃபார்மில் தொடர நினைத்த அவருக்கு பிரின்ஸ் அடி கொடுத்தாலும் அடுத்ததாக கமிட்டாகியிருக்கும் மாவீரன் காப்பாற்றிக்கொடுக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார் அவர்.
மாவீரன்: மண்டேலா படத்தின் மூலம் தேசிய விருது பெற்று கவனம் ஈர்த்த மடோன் அஸ்வின் மாவீரனை இயக்குகிறார். அதிதி ஷங்கர் கதாநாயகியாக நடிக்க; மிஷ்கின் வில்லனாக நடிக்கிறார். படம் ஜூலை 14ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. படத்தின் ட்ரெய்லர் வெளியாகி பலத்த வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் படத்திலிருந்து வெளியான மூன்று சிங்கிள்களும் ரசிகர்கள் வைப் பண்ணக்கூடிய அமைந்திருப்பதால் சிவாவும் திருப்தியாகவே இருக்கிறாராம்.
வாய்ஸ் ஓவர்: நிலைமை இப்படி இருக்க கடந்த சில நாட்களுக்கு முன்பு மிஷ்கின் ஒரு பேட்டி அளித்திருந்தார். அந்தப் பேட்டியில், மாவீரன் படத்துக்கு வாய்ஸ் ஓவர் கொடுப்பதற்காக ரஜினிகாந்த், கமல் ஹாசன் உள்ளிட்டோரிடம் கேட்கப்பட்டது. ஆனால் அவர்கள் மறுத்துவிட்டார்கள். இருப்பினும் பிரபலம் ஒருவர்தான் வாய்ஸ் ஓவர் கொடுத்திருக்கிறார். அது யார் என்று இப்போதைக்கு சொல்ல முடியாது என கூறி எதிர்பார்ப்பை கூட்டினார்.
கணக்கு போட்ட ரசிகர்கள்: மிஷ்கினின் இந்தப் பேட்டிக்கு பிறகு வாய்ஸ் ஓவர் கொடுத்தது தனுஷாக இருக்கலாம் என கூறப்பட்டது. ஆனால் அப்படி நடக்க வாய்ப்புகள் குறைவுதான் என ரசிகர்களில் ஒரு தரப்பினர் கூறினர். இந்தச் சூழலில் வாய்ஸ் ஓவர் பற்றிய புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.அதன்படி மாவீரன் படத்தில் விஜய் சேதுபதி ஒரு வாய்ஸ் கொடுத்திருக்கிறார் என கூறப்படுகிறது. ஆனால் இதில் எந்த அளவு உண்மை இருக்கிறது என்றும் தெரியவில்லை.
முடிந்த பஞ்சாயத்து?: சிவகார்த்திகேயனும், விஜய் சேதுபதியும்தான் தமிழ் சினிமாவின் தற்போதைய இளம் ஹீரோக்கள் தலைமுறையில் போட்டியாளர்களாக கருதப்பட்டனர். ஆனால் தங்கள் இருவருக்குள்ளும் எந்தப் போட்டியும் இல்லை என இருவரும் தொடர்ட்ந்து கூறிவந்தாலும் அந்தப் பேச்சு இன்னமும் ஓய்ந்தபாடில்லை. ஒருவேளை மாவீரனில் விஜய் சேதுபதி வாய்ஸ் ஓவர் கொடுத்தால் சிவா – விஜய் இருவருக்கும் போட்டி என்ற குரல் சற்று அடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.