உடல்நிலை காரணமாக சேலத்திலேயே அதிக நாள்கள் தங்கியிருந்த எடப்பாடி பழனிசாமி திருச்செந்தூர் சென்று வழிபாடு நடத்தி திரும்பினார். இனி நடைபெறும் சம்பவங்கள் தமக்கு சாதகமாக இருக்கும் என்று நினைக்கிறார்கள் அவரது தரப்பினர். பொது சிவில் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவுக்கு தன்னுடைய எதிர்ப்பை காட்டிய எடப்பாடி பழனிசாமி, பாஜகவை தனது வழிக்கு கொண்டு வந்துள்ளதாக கூறுகின்றனர் விவரம் அறிந்தவர்கள்.
பாஜக நடத்தும் ஆலோசனை கூட்டம்!மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் எதிர்கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணிகள் நடைபெறுகின்றன. பீகார் தலைநகர் பாட்னாவில் நடைபெற்ற கூட்டத்தை தொடர்ந்து பெங்களூரில் ஜூலை 17, 18 தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டடுள்ளது. எதிர்கட்சிகளுக்கு போட்டியாக பாஜகவும் ஜூலை 18ஆம் தேதி டெல்லியில் தங்களது கூட்டணிக் கட்சிகளுடன் ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
2024 தேர்தல் யாருக்கு சாதகம்?தென் மாநிலங்களில் பாஜக தனது செல்வாக்கை இழந்துள்ளது, வட மாநிலங்களிலும் சில மாநிலங்கள் கேள்விக்குறியாக உள்ளன. அதை கடந்து மணிப்பூர் விவகாரம், விலைவாசி உயர்வு என பல பிரச்சினைகள் பாஜகவுக்கு எதிராக உள்ளது. வர உள்ள ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல்களும் பாஜகவுக்கு சவாலாக இருக்கும் என்றே கூறுகின்றனர். இருப்பினும் எதிர்கட்சிகள் முழுதாக ஒருங்கிணையாத நிலையில் 2024 மக்களைவைத் தேர்தல் பாஜகவுக்கே சாதகமாக அமையும் என்று கூறுகின்றனர் அரசியல் விமர்சகர்கள்.
முன்கூட்டியே தேர்தல்?எதிர்கட்சிகளின் கூட்டணி முழு வடிவம் பெறுவதற்கு முன்னரே, பிரதமர் வேட்பாளர் பஞ்சாயத்துக்கள் அந்த பக்கம் நடைபெறுவதற்கு முன்னரே தேர்தலை அறிவித்து விட்டால் எளிதாக ஸ்கோர் செய்துவிடலாம் என்பது பாஜக மேலிடத்தின் திட்டமாக இருக்கிறது. இதற்காக தங்களது கூட்டணியில் இணையும் கட்சிகளுடன் ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளது பாஜக. எதிர்கட்சிகள் ஆலோசனை மேற்கொள்ளும் 18ஆம் தேதியே மீடியா கவனத்தை தங்கள் பக்கம் திருப்பும் வகையில் டெல்லியில் கூட்டணிக் கட்சியுடன் ஆலோசனை நடத்த உள்ளதாம்.
கூட்டணியை வலுப்படுத்தும் பாஜகஇந்த கூட்டத்தில் ஆந்திராவின் தெலுங்கு தேசம் கட்சி, மகாராஷ்டிராவின் ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா, அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ், சிரோன்மனி அகாலி தளம், உட்பட பல கட்சிகள் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் பாஜகவுடன் கூட்டணியில் இருக்கும் அதிமுக கலந்து கொள்ளுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
அண்ணாமலை வாய்ஸ் எடுபடவில்லை?தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையின் பேச்சுக்கள் திமுகவை மட்டுமல்லாமல் அதிமுகவையும் அவ்வப்போது உரசிப் பார்ப்பதால் அக்கட்சியுடன் கூட்டணி வேண்டாம் என்று அதிமுக முக்கிய புள்ளிகள் கூறிவருகின்றனர். பாஜகவின் செல்வாக்கு அதிகரித்துள்ளது, வாக்கு வங்கி விரிவடைந்துள்ளது எனவே பாஜக தலைமையில் சில கட்சிகளை ஒருங்கிணைத்து தேர்தலை சந்திக்கலாம் என்ற அண்ணாமலையின் கோரிக்கையை டெல்லி மேலிடம் இன்னும் பரிசீலிக்கவில்லையாம்.
இறங்கி வரும் பாஜகதேசிய அளவில் தங்கள் கூட்டணியிலிருந்து வெளியேறிய கட்சிகளையும் பாஜக தற்போது இணைத்து வருகிறது. அப்படியிருக்க எடப்பாடி பழனிசாமியை புறக்கணிக்க வாய்ப்பில்லை. தமிழ்நாட்டில் மூன்று அணிகள் போட்டியிட்டால் அது திமுகவுக்கே சாதகமாக முடியும் என்று டெல்லி நினைக்கிறது. ஓபிஎஸ், தினகரனுக்காக இரட்டை இலையை தன் வசப்படுத்திய எடப்பாடி பழனிசாமியை எதிர்த்தால் தங்களுக்கு தான் பாதிப்பு என கருதுகிறது.
அண்ணாமலைக்கு கொடுத்த அசைன்மெண்ட்!பொது சிவில் சட்டத்தை எதிர்ப்போம் என்று அறிவித்து எடப்பாடி பழனிசாமி பாஜகவுக்கு தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளார். இந்த எதிர்ப்பு அதிகமாகிவிடக் கூடாது, ஆரம்பத்திலேயே அதை அணைத்து மக்களவைத் தேர்தலுக்கு தயாராகவேண்டும் என திட்டமிட்டுள்ள பாஜக மேலிடம், அண்ணாமலையை அழைத்து திமுகவை மட்டும் டார்கெட் செய்யுங்கள், அதிமுகவுடன் உரசல் வேண்டாம் என்று பாடம் நடத்தியதாக சொல்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். அதுமட்டுமல்லாமல் 18ஆம் தேதி டெல்லி கூட்டத்துக்கு அதிமுகவையும் பங்கெடுக்க வைக்க முயற்சிகள் நடைபெறுகிறதாம்.