விழுப்புரம் தெற்கு மாவட்ட பா.ஜ.க தலைவராக இருப்பவர் வி.ஏ.டி.கலிவரதன். முகையூர் எனும் சட்டமன்றத் தொகுதி இருந்தபோது, அங்கு பா.ம.க சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏ-வாக பதவி வகித்தவர். சில வருடங்களுக்கு முன்பாக கட்சிக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், பா.ம.க-விலிருந்து விலகி பா.ஜ.க-வில் ஐக்கியமானார். தற்போது விழுப்புரம் தெற்கு மாவட்ட பா.ஜ.க தலைவராக இருந்து வருகிறார்.
பா.ஜ.க பெண் நிர்வாகி ஒருவர் இவர்மீது அளித்த பாலியல் புகார்; கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது கட்சிப் பிரமுகர் ஒருவரின் மனைவி, இவர்மீது அளித்த கொலை மிரட்டல் புகார்; ‘அண்ணாமலை என்ன கடவுளா?‘ என்ற ஆடியோ சர்ச்சை என தொடர்ந்து கட்சி வட்டார சர்ச்சையில் சிக்கிவரும் இவர்தான், தற்போது மீண்டுமொரு சர்ச்சையில் சிக்கியிருக்கிறார்.
கடந்த காலங்களில் இவர் தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வந்ததால், இவரிடமிருந்து மாவட்டத் தலைவர் பதவி பறிக்கப்பட்டு, பெயரளவிலான மாநில பொறுப்பு அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பாக, விழுப்புரம் மாவட்டம் பா.ஜ.க, கட்சிரீதியாக வடக்கு மற்றும் தெற்கு மாவட்டங்களாக பிரிக்கப்பட்டது. அப்போது, வடக்கு மாவட்டத் தலைவராக ஏ.டி.ராஜேந்திரனும்; தெற்கு மாவட்டத் தலைவராக வி.ஏ.டி.கலிவரதனும் அறிவிக்கப்பட்டு, செயல்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், கட்சி பொறுப்பு நியமனம் தொடர்பாக, பா.ஜ.க-வின் விழுப்புரம் மாவட்ட ஐ.டி பிரிவு தலைவர் பிரபாகரன் என்பவர் வி.ஏ.டி.கலிவரதனிடம் செல்போனில் பேசியதாகத் தெரிகிறது. அந்த ஆடியோ தற்போது கட்சி வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளதோடு, சமூக வலைதளங்களிலும் பரவி வருகிறது. வி.ஏ.டி.கலிவரதன் பேசுவதாகக் கூறப்படும் அந்த ஆடியோவில், “இந்த பா.ஜ.க-வில் இருப்பவனுங்களுக்கு எல்லாம் எந்த பொறுப்பு என்ன பவர் என்றெல்லாம் தெரியாமல் இருக்குது. நோகாமல் பொறுப்பு வாங்கிட்டு, ஏமாத்திட்டு போயிடலாம்னு பாக்குறானுவ. பொறுப்புக்கான பவர், இன்னா எதுன்னு தெரியாம இருக்கானுவ” என்றும், தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தியும் பேசும்படியாக அமைந்திருக்கிறது.
இந்த ஆடியோ சர்ச்சை குறித்து வி.ஏ.டி.கலிவரதனிடம் விளக்கம் கேட்டோம். “அது பழைய ஆடியோ. அதெல்லாம் வேண்டுமென்றே பண்ணுறது. யாருடைய வளர்ச்சியையும் யாரும் தடுக்க முடியாது” என்ற்உ முடித்துக் கொண்டார் சுருக்கமாக.