போபால்: மத்திய பிரதேசத்தில் பழங்குடியினத்தை சேர்ந்தவரின் முகத்தில் பாஜக பிரமுகர் சிறுநீர் கழித்து அவமரியாதை செய்ததாக கூறப்படும் விவகாரத்தில் அக்கட்சியின் முக்கிய தலைவர் ஒருவர் திடீர் ராஜினாமா செய்து பரபரப்பை கிளப்பி உள்ளார்.
மத்திய பிரதேசத்தில் பாஜக ஆட்சி நடக்கிறது. முதல்வராக சிவ்ராஜ் சிங் சவுகான் உள்ளார். இந்நிலையில் தான் சித்தி மாவட்டம் குப்ரி கிராமத்தில் தாஷ்மத் ராவத் என்ற பழங்குடியினத்தை சேர்ந்தவர் மீது பிரவேஷ் சுக்லா என்பவர் சிறுநீர் கழித்தார்.
இது கடந்த 5ம் தேதி நடந்தது. இதுதொடர்பான வீடியோ இணையதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதையடுத்து பிரவேஷ் சுக்லா மீது அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்தன.
மேலும் பிரவேஷ் சுக்லா பாஜக எம்எல்ஏவுக்கு நெருக்கமானவர் எனவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து பிரவேஷ் சுக்லா கைது செய்யப்பட்டார். அவர் மீது எஸ்சி, எஸ்டி வன்கொடுமை, தேசிய பாதுகாப்பு சட்டம் உள்ளிட்டவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் சட்டவிரோதமாக நிலத்தை ஆக்கிமித்து கட்டியிருந்ததாக கூறி பிரவேஷ் சுக்லா வசித்து வந்த வீடும் புல்டோசரால் இடிக்கப்பட்டது.
அதோடு பாதிக்கப்பட்ட பழங்குடியினத்தவரை வீட்டுக்கு அழைத்து மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் காலை கழுவி மன்னிப்பு கோரினார். அதன்பிறகு அவருடன் சேர்ந்து உணவு சாப்பிட்டார். இந்நிலையில் தான் சித்தி மாவட்ட பாஜக பொது செயலாளர் விவேக் கோல் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
இதற்கான கடிதத்தை அவர் கட்சி தலைவருக்கு அனுப்பி உள்ளார். அந்த கடிதத்தில் அவர் ‛‛பழங்குடியினத்தை சேர்ந்தவர் மீது சிறுநீர் கழிக்கப்பட்ட விவகாரத்தை குறிப்பிட்டு கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். கடந்த 2 ஆண்டுகளாக சித்தி பாஜக எம்எல்ஏ கேதர்நாத் சுக்லாவின் நடவடிக்கையால் நான் புண்பட்டுவிட்டேன்.
குறிப்பாக பழங்குடி மக்களின் நிலஅபகரிப்பு மற்றும் அவர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் என்னை காயப்படுத்தின. இப்போது ஒருவர் பழங்குடியினத்தவர் மீது சிறுநீர் கழித்துள்ளனர். இதுபோன்ற செயல்கள் என்னை அதிகமான பாதித்தன. இதனால் பாஜகவில் இருந்து ராஜினாமா செய்து கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் ராஜினாமா குறித்த விவேக் கோல் கூறுகையில், ‛‛நான் எனது ராஜினாமா கடிதத்தை இ-மெயில் மூலம் மத்திய பிரதேச பாஜக தலைவர் விடி சர்மாவுக்கு அனுப்பி உள்ளேன். மேலும் பாஜகவின் நிர்வாகிககள் அடங்கிய வாட்ஸ்அப் குழுவிலும் அனுப்பி உள்ளேன். எனது ராஜினாமா முடிவு என்பது இறுதியானது. எனது ராஜினாமா முடிவை திரும்ப பெற கட்சியினர் கூறினர். ஆனால் நான் உறுதியாக இருக்கிறேன்” என்றார்.
விவேக் கோல் முதலில் பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்தார். சுராட் சட்டசபை தொகுதியில் போட்டியிட்ட அவர் தோல்வியடைந்தார். அதன்பிறகு பாஜகவில் இணைந்து மாவட்ட பொது செயலாளராக செயல்பட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.