சினிமா மீது மோகம்.. பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் செய்த காரியம்.. இடைத்தரகர் உள்பட 3 பேர் கைது

விசாகப்பட்டினம்: சினிமா நடிகையாக ஆசைப்பட்ட பெண் காவல் ஆய்வாளர் மிரட்டி பணம் பறித்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்தவர் சீனி மற்றும் ஸ்ரீதர். இவர்கள் இருவரும் இந்திய கடற்படையில் பணியாற்றி வருகிறார்கள். இவர்கள் தங்கள் பணியிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டனர்.

இவர்கள் தங்களிடம் இருந்த ரூ 1 கோடி மதிப்பிலான ரூ 2000 நோட்டுகளை 10 சதவீதம் கமிஷன் அடிப்படையில் மாற்ற திட்டமிட்டனர். அதற்காக அந்த நோட்டுகளை இடைத்தரகராக இருந்த சூரிபாபுவிடம் கொடுத்தனர்.

பணத்தை மாற்றிய சூரிபாபு 90 லட்சம் ரூபாய்க்கு ரூ 500 நோட்டு கட்டுகளை எடுத்துக் கொண்டு விசாகப்பட்டினம் கடற்கரை வழியாக வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் ஆயுதப்படை காவல் ஆய்வாளர் ஸ்வர்ணலதா ஊர்க் காவல் படையினருடன் சேர்ந்து கண்காணிப்பு பணியில் இருந்தார்.

அப்போது அவ்வழியாக வந்த சூரிபாபுவின் காரை தடுத்து நிறுத்தினார் ஸ்வர்ணலதா. பின்னர் காரை சோதனையிட்டு சூரிபாபு வைத்திருந்த பையை சோதனை செய்தார். அந்த பையில் கட்டுக்கட்டாக ரூ 500 நோட்டுகள் இருப்பதை கண்டார். உடனே இந்த பணம் ஏது, யாருடையது, எதற்காக கொண்டு செல்கிறீர்கள் என கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் இத்தகைய பணத்தை கொண்டு செல்ல ஏதாவது ஆவணம் இருக்கிறதா என கேட்டுள்ளார். ஆனால் சூரிபாபுவிடம் எந்த காரணமும் இல்லை ஆவணமும் இல்லை. இதுதான் சந்தர்ப்பம் என நினைத்த ஸ்வர்ணலதா, எனக்கு 20 லட்சம் கொடுத்துவிட்டு மீதி பணத்தை எடுத்துச் செல். இல்லாவிட்டால் ஆவணமின்றி பணம் கொண்டு செல்வதாக மொத்த பணத்தையும் பறிமுதல் செய்துவிடுவேன் என மிரட்டியதாக தெரிகிறது.

ஸ்வர்ணலதாவுடன் பேரம் பேசிய சூரிபாபு கடைசியாக ரூ 12 லட்ச ரூபாயை அவருக்கு கொடுத்துவிட்டு மீதமிருந்த பணத்தை எடுத்துச் சென்று பணத்தை சீனி, ஸ்ரீதரிடம் ஒப்படைத்து ஸ்வர்ணலதா குறித்தும் சூரிபாபு அவர்களிடம் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த கடற்படை அதிகாரிகள் இருவரும் நேராக விசாகப்பட்டினம் காவல் ஆணையர் விக்கிரமாவை சந்தித்து நடந்த விஷயத்தை புகாராக அளித்தனர்.

இதையடுத்து விக்கிரமா உத்தரவின் பேரில ஸ்வர்ணலதா மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்யப்பட்டார். மேலும் இடைத்தரகர் சூரிபாபுவும் ஊர்க் காவல் படையினர் இருவரும் கைது செய்யப்பட்டனர். பின்னர் ஸ்வர்ணலதாவிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல சுவாரஸ்யமான தகவல்களை தெரிவித்திருந்தார்.

சினிமா மீது மோகம் கொண்ட ஸ்வர்ணலதா தற்போது நடன பயிற்சியை மேற்கொண்டு வருகிறார். ஏபி 31 எனும் படத்தில் அவர் கதாநாயகியாக நடித்து வருகிறார். சினிமா தயாரிப்பு நிறுவனத்தின் பங்குதாரராகவும் இருந்து வருகிறாராம். சினிமா தயாரிக்க பணம் தேவை என்பதால் இப்படி மிரட்டி வாங்கி வருவதாக தெரிவித்தார்.

ஆந்திராவை ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார் ஸ்வர்ணலதா. ஆனால் அவரை காப்பாற்ற அக்கட்சியின் முக்கிய பிரமுகர்கள் முயற்சி எடுத்து வந்த நிலையில் அனைத்துமே தோல்வியில் முடிந்ததாக தெரிகிறது. ஸ்வர்ணலதா தனது நடிப்பு திறனை வெளிகாட்ட சமூகவலைதளங்களில் எல்லாம் வீடியோ போட்டு வருகிறார்.

Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.