விழுப்புரம் தெற்கு மாவட்ட பா.ஜ.க தலைவராக இருப்பவர் வி.ஏ.டி.கலிவரதன். பா.ஜ.க பெண் நிர்வாகி ஒருவர் இவர்மீது அளித்த பாலியல் புகார்; கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது கட்சிப் பிரமுகர் ஒருவரின் மனைவி, இவர்மீது அளித்த கொலை மிரட்டல் புகார்; ‘அண்ணாமலை என்ன கடவுளா?’ என்ற ஆடியோ சர்ச்சை எனத் தொடர்ந்து கட்சி வட்டார சர்ச்சையில் சிக்கி வருகிறார். இந்த நிலையில், அண்மையில் மீண்டுமொரு ஆடியோ சர்ச்சையில் சிக்கியிருந்தார்.
கட்சி பொறுப்பு நியமனம் தொடர்பாக, பா.ஜ.க-வின் விழுப்புரம் மாவட்ட ஐ.டி பிரிவு தலைவர் பிரபாகரன் என்பவர் வி.ஏ.டி.கலிவரதனிடம் செல்போனில் பேசியதாகத் தெரிகிறது. அதில், வி.ஏ.டி.கலிவரதன் பேசுவதாகக் கூறப்படும் அந்தப் பகுதி, “இந்த பா.ஜ.க-வில் இருப்பவனுங்களுக்கு எல்லாம் எந்த பொறுப்பு… என்ன பவர் என்றெல்லாம் தெரியாமல் இருக்கு” என்று, தகாத வார்த்தைகளைப் பயன்படுத்திப் பேசும்படியாக அமைந்திருந்தது. அந்த ஆடியோ, பா.ஜ.க கட்சி வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில், வி.ஏ.டி.கலிவரதனை மாவட்டத் தலைவர் பதவியிலிருந்து நீக்கக் கோரி, விழுப்புரம் பா.ஜ.க-வினர், விழுப்புரம் பா.ஜ.க அலுவலகத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட மகளிரணிச் செயலாளர் வனிதா சுதா, “வி.ஏ.டி.கலிவரதன், பதவிக்கு வந்ததிலிருந்து எல்லா நிர்வாகிகளும் மனகஷ்டத்தில்தான் இருக்கிறார்கள். இப்போது சிவக்குமார் என்பவர் மாவட்டச் செயலாளர் பொறுப்பு கேட்டதற்காக அவரை தவறாகப் பேசியதோடு மட்டுமின்றி, பா.ஜ.க-வில் இருக்கக்கூடிய எல்லோரையும் அவர் தவறாகப் பேசுகிறார். எதிர்க்கட்சிகளில் இருப்பவர்கள்தான் பா.ஜ.க-வினரைத் தவறாகப் பேசுவார்கள். ஆனால் இவர் அப்படி பேசுகிறார், இவர் என்ன எதிர்க்கட்சியிலா இருக்கிறார்… இவருக்கு மாவட்டத் தலைவராக இருப்பதற்கு தகுதியே கிடையாது. இன்னும் நிறைய ஆடியோக்களை வெளியிடுவதற்கு, நிறைய பேர் தயங்கிக் கொண்டிருக்கிறார்கள். ஏனெனில், எங்கள் கட்சியைப் பற்றி நாங்களே தவறாகப் பேசக் கூடாது.
இதற்கு முன்பாக, பாரத பிரதமரின் திட்டங்களை, மக்களிடையே கொண்டு சேர்ப்பதை சந்தோஷமாகச் செய்தோம். ஆனால் இப்போது வெளியே போவதற்கே அசிங்கமாக இருக்கிறது. நிறைய யூடியூப் சேனல்களில் பார்த்தீர்கள் என்றால், பா.ஜ.க-வில் மகளிரை இப்படி, அப்படிப் பேசுகிறார்கள் என்று சொல்கிறார்கள். அப்படி இருக்கையில், நாங்கள் எப்படி வெளியே சென்று மற்ற மகளிரிடம் பேச முடியும், தயக்கமாக இருக்கிறது. இதற்கு மேலே நாங்கள் எப்படிச் சென்று கட்சிப் பணியை செய்ய முடியும்… இதை எல்லாத்தையும் தயவு செய்து தலைமை புரிந்துகொள்ள வேண்டும். யாரை வேண்டுமென்றாலும் கட்சித் தலைவராகப் போடுங்கள். நாங்கள் கட்சிப் பணி செய்வதற்குத் தயாராக இருக்கிறோம். ஆனால் இவர் இருந்தால், இதற்கு மேலே கட்சிப் பணி செய்வதற்கு எங்களுக்கு கஷ்டமாக இருக்கிறது. முதலில் எங்களுக்கு அசிங்கமாக இருக்கிறது. ரொம்ப அசிங்கமாக இருக்கிறது.
மற்ற மகளிரைச் சென்று கூப்பிடும்போது… `என்னங்க, நீங்களே அந்தக் கட்சியில இருக்கீங்க… பொறுப்புல இருக்கீங்க… உங்களுக்கே இப்படில்லாம் நடக்குது. உங்களுக்கே மரியாத இல்ல… நாங்கலாம் வந்து என்ன பண்ணப்போறோம்’ என்று கேட்கிறார்கள். இது எங்களுக்கு மிகவும் இழிவான செயலாக இருக்கிறது. எனவே, விழுப்புரம் தெற்கு மாவட்டத் தலைவரை மாற்ற வேண்டும். தலைமை இதற்கொரு நல்ல முடிவை எடுக்க வேண்டும். அவர் எங்களுக்கு மாவட்டத் தலைவராக கண்டிப்பாக இருக்கவே கூடாது. அப்படி மீறி அவர் இருந்தால், வரும் தேர்தல் சமயத்தில் இந்த விழுப்புரம் மாவட்டத்தில் அவருடன் இணைந்து யாரும் வேலை செய்ய மாட்டார்கள்.
இந்த கூட்டத்துக்கு இன்னும் எத்தனையோ பேர் வந்திருப்பார்கள். அவர்களை எல்லாம் வரவிடாமல் அவர்தான் தடுக்கிறார், மிரட்டுகிறார். எல்லோரும் பொறுப்புக்காக பயந்து கொண்டிருக்கிறார்கள். நாங்கள் பொறுப்புக்காக பயப்படவில்லை. எங்களுக்குப் பொறுப்பே இல்லாமல் அடிப்படை தொண்டராக இருந்தும் பணி செய்ய தயாராக இருக்கிறோம்” என்று தெரிவித்தார்.