புதுடெல்லி: உச்ச நீதிமன்ற வழக்குகளை வைத்து மணிப்பூரில் கலவரத்தை மேலும் தூண்டக் கூடாது என்று நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்தனர்.
குகி பழங்குடியினருக்கு ராணுவப் பாதுகாப்பு வழங்கவேண்டும் என தொண்டு நிறுவனம் ஒன்று தாக்கல் செய்த மனு உள்ளிட்ட மணிப்பூர் வன்முறை தொடர்பான வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. முன்னதாக இந்த வழக்கில், மணிப்பூரில் நிலவும் சட்டம் – ஒழுங்கு பிரச்சினை குறித்து கவலை தெரிவித்த உச்ச நீதிமன்றம், வன்முறையால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்துள்ள மக்களுக்காக மேற்கொள்ளப்பட்ட மறுவாழ்வு நடவடிக்கைகள், நிலைநிறுத்தப்பட்டுள்ள படைகளின் விவரங்கள், மணிப்பூரின் தற்போதைய சட்டம் – ஒழுங்கு நிலைமை குறித்து மாநில அரசு ஜூலை 10-ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், இன்று இந்த வழக்கை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு விசாரித்தபோது, “மாநிலத்தில் ஏற்கெனவே வன்முறைச் சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. அந்த வன்முறைகளுக்கு தூபம் போடுவதுபோல் இங்கு நடைபெறும் வழக்கு விசாரணைகளைக் காரணமாக்கி விடக்கூடாது. நாங்கள் சட்டம் ஒழுங்கைக் காப்பாற்றும் அமைப்போ அல்ல பாதுகாப்பு வழங்கும் அமைப்பு அல்ல” என்று தெரிவித்தது.
மணிப்பூர் அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கூறுகையில், “மணிப்பூரில் நிலவும் சூழல் குறித்தும் அதனைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் குறித்தும் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது” என்றார்.
அப்போது குறுக்கிட்ட நீதிமன்றம் குகி தரப்பில் அஜரான மூத்த வழக்கறிஞர் கோலின் கொன்சால்வேஸிடம், மணிப்பூர் அரசு தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரத்தில் உள்ள ஆக்கபூர்வமான ஆலோசனைகளைப் பரிசீலிக்குமாறு தெரிவித்தது.
பின்னணி: வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் 53 சதவீதம் இருக்குமு் மைத்தி சமூகத்தினர், தங்களை பழங்குடியினர் பட்டியலில் (எஸ்டி) சேர்க்க அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்கு, பழங்குடியினர் பட்டியலில் இடம்பெற்றுள்ள குகி சமூக மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால், இரு தரப்புக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது. மைத்தி சமூக மக்களை பழங்குடியினர் பிரிவில் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து குகி பழங்குடியினர் கடந்த மே மாதம் 3-ம் தேதி அமைதிப் பேரணி நடத்தினர். இதில் இரு பிரிவினருக்கும் இடைய மோதல் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து ஒரு மாதத்திற்கும் மேலாக நீடித்து வரும்மோதலில் இதுவரை 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.