ஹைதராபாத்: மக்களவை தேர்தலில், தமிழகத்தின் ராமநாதபுரம் தொகுதியில் இருந்து பிரதமர் மோடி போட்டியிட வேண்டும் என்று, தெலங்கானாவில் நடந்த பாஜக மண்டல ஆலோசனை கூட்டத்தில் பெரும்பாலான நிர்வாகிகள் விருப்பம் தெரிவித்துள்ளனர். இதனால், ராமநாதபுரத்தில் அவர் போட்டியிட அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
பாஜக மண்டல அளவிலான ஆலோசனை கூட்டம் தெலங்கானா மாநிலம் நாம்பள்ளியில் உள்ள கட்சி அலுவலகத்தில் கடந்த 9-ம் தேதி நடைபெற்றது. கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் நடந்த இக்கூட்டத்தில், 11 மாநிலங்களை சேர்ந்த பாஜக தலைவர்கள், தேசிய பொதுச் செயலாளர்கள் பங்கேற்றனர்.
தென் மாநிலங்களில் கட்சியை வலுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு கட்சி பிரதிநிதிகளை நட்டா வலியுறுத்தினார். பிரதமர் நரேந்திர மோடி, தமிழகத்தின் ராமநாதபுரம் தொகுதியில் இருந்து மக்களவைக்கு போட்டியிட வேண்டும் என்று பெரும்பாலான நிர்வாகிகள் விருப்பம் தெரிவித்தனர்.
தென் மாநிலங்களில் இருந்து 50 இடங்களுக்கு மேல் வெற்றி பெற வேண்டும் என்பது பாஜகவின் இலக்காக உள்ளது. அதற்கு ஏதுவாக, பாஜகவின் தலைமை முடிவெடுக்கும் பட்சத்தில், பிரதமர் மோடி வரும் 2024 மக்களவை தேர்தலில் தமிழகத்தின் ராமநாதபுரம் தொகுதியில் இருந்து போட்டியிட அதிக வாய்ப்புகள் உள்ளதாக நிர்வாகிகள் கூறுகின்றனர்.
இதுதொடர்பாக ‘இந்து தமிழ் திசை’நாளிதழில் ஏற்கெனவே சிறப்பு செய்திகள் வெளியாகின. தற்போது, அதை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில் மண்டல ஆலோசனை கூட்டத்தில் இதுதொடர்பாக தீவிரமாக ஆலோசிக்கப்பட்டுள்ளது.
தென்னிந்திய மாநிலங்கள் ஒன்றில் இருந்து மோடியை களமிறங்கச் செய்வதன் மூலம் தனது செல்வாக்கை அதிகரித்துக் கொள்ளலாம் என்பது பாஜகவின் கணக்காக உள்ளது.
தற்போது, இந்துக்கள் அதிக அளவில் உள்ள வாராணசி தொகுதியின் பிரதிநிதியாக மோடி உள்ளார். இந்த சூழ்நிலையில், கணிசமான முஸ்லிம் வாக்குகளை கொண்ட ராமநாதபுரம் தொகுதியில் பிரதமர் மோடியை களமிறக்கி, அவரை வெற்றிபெறச் செய்வதன் மூலம் தென் மாநிலங்களில் பாஜக குறித்த எதிர்மறையான பார்வையை மாற்ற முடியும் என்பதுடன், இந்துக்களின் ஆதரவுடன் தங்களது செல்வாக்கை தென் மாநிலங்களில் நிலைநிறுத்தலாம் என்பதும் அக்கட்சியின் பலமான நம்பிக்கையாக உள்ளது.
‘வெறுப்பின் மெகா மால்’: மோடி அரசின் 9 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் மற்றும் பேரணிகளை நாடு முழுவதும் பாஜகவினர் நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, குஜராத்தின் பஞ்ச்மஹால் மாவட்டத்தின் கோத்ரா நகரில் நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில் ஜே.பி.நட்டா பேசியதாவது: மக்கள் நலனில் அக்கறை இல்லாத குடும்ப கட்சிகள், பிரதமர் மோடி மீது மாறி மாறி குற்றம் சாட்டி வருகின்றன.
உலக அளவில் பிரதமர் மோடிக்கு கிடைத்து வரும் புகழை தாங்கிக்கொள்ள முடியாமல் காங்கிரஸ் கட்சியினர் அவ்வப்போது தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். பிரதமரை எதிர்க்கிறோம் என்ற பெயரில் நாட்டையே எதிர்ப்பதற்கு அவர்கள் துணிந்துவிட்டனர்.
1975-ல் எமர்ஜென்சியை அறிவித்து 1.50 லட்சம் பேரை சிறையில் அடைத்தவர்கள்தான் இன்று ஜனநாயகம் குறித்து நமக்கு பாடம் எடுக்கின்றனர். மோடியை அவதூறான வகையில் கீழ்த்தரமாக விமர்சித்து காங்கிரஸ் தலைவர்கள் அரசியல் செய்து வருகின்றனர். 140 கோடி மக்களுக்கு பிரதமர் மோடி சேவையாற்றி வருவதை பார்த்து அவர்கள் வருத்தம் அடைந்துள்ளனர்.
மோடி மீது தொடர்ந்து வெறுப்பை உமிழ்ந்து வரும் ராகுல் காந்தி ‘அன்புக் கடை’ நடத்துவதாக கூறுவது வியப்பாக உள்ளது. உண்மையில் அவர் ‘வெறுப்பின் மெகா மால்’ ஆக இருக்கிறார் என்பதே உண்மை.
மக்கள் சேவையில் பிரதமர் மோடிமும்முரமாக இருக்கும்போது, எதிர்க்கட்சிகள் தங்கள் சொந்த குடும்பத்தை காப்பாற்றுவதில்தான் கண்ணும் கருத்துமாக செயல்பட்டு வருகின்றன.
காங்கிரஸ், சமாஜ்வாதி, பிஆர்எஸ், தேசியவாத காங்கிரஸ், தேசிய மாநாட்டுகட்சி, பிடிபி, சவுதாலா, பாதல் குடும்பங்களை இதற்கு சிறந்த உதாரணங்களாக கூறலாம். அவர்கள் அனைவரும் தங்கள்குடும்பங்களை பற்றி மட்டுமே கவலைப்படுகின்றனர். அந்த குடும்பங்களின் வாரிசுகள் மட்டுமே கட்சி தலைமை பதவிகளை ஏற்க முடியும்.
சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகிய 3 பேருக்குள் காங்கிரஸ் கட்சி அடங்கிவிட்டது. மற்ற காங்கிரஸ் தலைவர்கள் அனைவரும் ஒப்பந்த அடிப்படையில்தான் உள்ளனர். இவ்வாறு ஜே.பி.நட்டா பேசினார்.