சென்னை: விஜய் டிவியின் முக்கியமான சீரியல்களில் ஒன்றாக பாரதி கண்ணம்மா தொடர் காணப்படுகிறது. டிஆர்பியிலும் முன்னணி இடத்தை இந்தத் தொடர் பிடித்துள்ளது.
கடந்த பிப்ரவரியில் இந்தத் தொடரின் முதல் பாகம் நிறைவடைந்த நிலையில், சில தினங்களிலேயே சீரியலின் இரண்டாவது சீசன் துவங்கியது.
முற்றிலும் மாறுபட்ட கிராமத்து கதைக்களத்தில் இந்தத் தொடரின் இரண்டாவது சீசன் துவங்கப்பட்டு தற்போது விறுவிறுப்பான எபிசோட்களை தந்து வருகிறது.
பாரதி கண்ணணம்மா 2 தொடரின் இந்த வார ப்ரமோ வெளியீடு: விஜய் டிவியின் முன்னணி தொடர்களின் வரிசையில் இடம்பெற்றுள்ளது பாரதி கண்ணம்மா 2 தொடர். இந்தத் தொடர் சேனலின் டிஆர்பியிலும் அதிக புள்ளிகளை பெற்று வருகிறது. முந்தைய சீசன் கடந்த பிப்ரவரியில் நிறைவடைந்த நிலையில், தற்போது தொடரின் இரண்டாவது சீசன் துவங்கி கடந்த 5 மாதங்களாக ரசிகர்களை கவர்ந்து வருகிறது. கடந்த சீசனில் நகரத்து கதைக்களத்தை மையமாக வைத்து இருந்த நிலையில் தற்போது கிராமத்து கதைக்களத்தை கையில் எடுத்துள்ளார் இயக்குநர்.
ஊதாரித்தனமாக சுற்றித்திரியும் பாரதியை, கண்ணம்மா மீதான ஈர்ப்பு மற்றும் காதல் சிறப்பாக மாற்றுகிறது. தன் வாழ்க்கையில் எதை இழந்தாலும் கண்ணம்மாவை இழக்கக்கூடாது என்பதில் உறுதியாக காணப்படுகிறார் பாரதி. அதற்கு ஏற்றாற்போல, கண்ணம்மாவிற்கும் பாரதிக்குமான உறவை பிரபஞ்சமே இணைக்கும் என்று நம்புகிறார் பாரதி. அவர் குளத்தில் எறியும் மாலை கண்ணம்மா கழுத்தில் சேர்கிறது. அவர் கொடுக்கும் குங்குமத்தை ஏற்கிறார் கண்ணம்மா.
இதையடுத்து கண்ணம்மாவின் காதலை பெற பாரதி, பிரம்ம பிரயத்தனம் செய்கிறார். பாரதியின்மீது காதல் இருந்தாலும் தன்னுடைய முந்தைய வாழ்க்கை மற்றும் தற்போதைய சொந்தங்கள் ஆகியவற்றை மனதில் வைத்து பாரதியின் காதலை ஏற்க மறுக்கிறார் கண்ணம்மா. ஆனால் தொடர்ந்த பாரதியின் முயற்சிகள், கண்ணம்மாவின் மனதை மாற்றுகிறது. ஒருகட்டத்தில் பாரதியின் காதலை ஏற்றுக் கொள்கிறார் கண்ணம்மா.
இந்நிலையில் அவர்கள் வீட்டில் நடக்கும் தீவிபத்தில், பாரதியின் அம்மா சவுந்தர்யாவை காப்பாற்றுகிறார் வெண்பா. இதனால் அவர்மீது சவுந்தர்யா மற்றும் பாரதிக்கு ஏற்படும் நன்றியுணர்ச்சியை ஆயுதமாக்கி, அதன்மூலம் சவுந்தர்யா மனதை மாற்றி, பாரதியை மணக்க அவர் சதித்திட்டம் தீட்டுகிறார். ஆனால் கண்ணம்மாவை காதலிக்கும் பாரதி, இந்த திருமணத்தை ஏற்க முடியாமல் தன்னுடைய தாயிடம் வாதாடுகிறார். ஆனால் பாரதியை மிரட்டி நிச்சயதார்த்தத்தை செய்து வைக்கிறார்.
இந்நிலையில், பாரதி மற்றும் கண்ணம்மாவின் காதல் சவுந்தர்யா மற்றும் குடும்பத்தினருக்கு தெரியவர, அடுத்த நாளே வெண்பாவிற்கும் பாரதிக்கும் கோயிலில் பாரதிக்கு தெரியாமல் திருமண ஏற்பாடுகளை செய்கிறார் சவுந்தர்யா. இந்த விஷயத்தை கேள்விப்படும் பாரதி, கண்ணம்மாவை திருமணம் செய்ய மாலை மாற்றிக் கொள்கிறார். அவர் தாலியை கட்டும் நேரத்தில் அங்குவரும் சவுந்தர்யா அந்த திருமணத்தை நிறுத்துவதாக இந்த வார ப்ரமோ காணப்படுகிறது.
இந்நிலையில், விஜய் டிவி வெளியிட்டுவரும் அடுத்தடுத்த புகைப்படங்களில் திருமணம் நடைபெற்றுள்ளதாக காணப்படுகிறது. ஆனால் பாரதி, தன்னுடைய தாயின் எதிர்ப்பை மீறி கண்ணம்மா கழுத்தில் தாலி கட்டுவாரா அல்லது பாரதி மூலம் சொத்துக்களை அடைய நினைக்கும் வெண்பா கழுத்தில் தாலி கட்டுவாரா என்பதை அடுத்தடுத்த எபிசோட்களை பார்க்கலாம். இந்த வார ப்ரமோ ரசிகர்களிடையே அதிகப்படியான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.