சென்னை: Jawan Trailer (ஜவான் ட்ரெய்லர்) அட்லீ இயக்கத்தில் உருவாகியிருக்கும் ஜவான் படத்தின் ட்ரெய்லரை லோகேஷ் கனகராஜ் பாராட்டியிருக்கிறார்.
தமிழில் ராஜாராணி, தெறி, மெர்சல், பிகில் ஆகிய படங்களை இயக்கியவர் அட்லீ. முதல் படமான ராஜா ராணியை 100 நாட்கள் ஓடிய படமாக கொடுத்தவர். அவரது மேக்கிங்கும், அவர் வைத்த ஷாட்களும் ஃப்ரெஷ்ஷாக இருந்ததன் காரணமாக அந்தப் படத்திலேயே அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துவிட்டார். இதன் காரணமாக இரண்டாவது படமே விஜய்யை வைத்து இயக்குவதற்கு கமிட்டானார்.
வெறித்தனமான தெறி: அதன்படி தெறி படத்தை விஜய்யை வைத்து இயக்கினார். சமந்தா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். படத்தின் சில காட்சிகள் சத்ரியன், பாட்ஷா ஆகிய படங்களை நினைவூட்டினாலும் இப்படத்திலும் தனது மேக்கிங்கிலும், மாஸ் நிரம்பிய சீன்களிலும் தப்பித்தார் அட்லீ. முக்கியமாக அந்தப் படத்துக்கு ரசிகர்கள் தங்களது ஏகோபித்த ஆதரவை வழங்கினார்கள்.
ஒத்துப்போன வேவ் லெங்த்: சூழல் இப்படி இருக்க விஜய்க்கும், அட்லீக்கும் தெறி படத்திலிருந்தே வேவ் லெங்த் நன்றாகவே ஒத்துப்போய்விட்டது. எனவே தெறி படத்துக்கு பிறகு வரிசையாக மெர்சல், பிகில் ஆகிய படங்களை இயக்கினார் அட்லீ. இவற்றில் மெர்சல் மட்டும் ஹிட்டாகி 100 கோடி ரூபாயை வசூலித்தது. விஜய் படங்களில் முதன்முறையாக நூறு கோடி ரூபாய் வசூல் செய்தது மெர்சல்தான் என கூறப்படுகிறது. விஜய்யுடன் வேவ் லெங்த் ஒத்துப்போய்விட்டதால் விஜய்யின் ரசிகர்களிடமும் அட்லீக்கு மவுசு கூடியது.
ஹிந்தியில் அட்லீ: இதனையடுத்து விஜய்யை வைத்தே மட்டும்தான் அட்லீ படம் இயக்குவாரா என்ற கேள்வி எழுந்த சூழலில் யாருமே எதிர்பார்க்காத சூழலில் ஹிந்தியில் கமிட்டானார் அட்லீ. அதுவும் ஷாருக்கானை வைத்து படம் இயக்க கமிட்டானார். படத்துக்கு ஜவான் என பெயரிடப்பட்டுள்ளது. நயன்தாரா, விஜய் சேதுபதி, ப்ரியாமணி, யோகிபாபு, தீபிகா படுகோனே (கெஸ்ட் ரோல்) உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர்.
அட்டகாச ட்ரெய்லர்: படமானது முதலில் ஜூன் 2ஆம் தேதி வெளியாகவிருந்தது. ஆனால் படப்பிடிப்பு முடிக்க தாமதமானதால் செப்டம்பர் 7ஆம் தேதி வெளியாகிறது. இந்நிலையில் படத்தின் ட்ரெய்லர் நேற்று காலை வெளியானது. ட்ரெய்லரை பார்த்த ரசிகர்கள் ஏகத்துக்கும் கொண்டாடிவருகின்றனர். அதேசமயம் சில காட்சிகள் அப்படியே பிற படங்களை நியாபகப்படுத்துகின்றன. படத்தில் என்ன செய்து வைத்திருக்கிறாரோ என்ற கேள்வியையும் ரசிகர்கள் முன் வைத்தனர்.
லோகேஷ் கனகராஜ் பாராட்டு: இப்படி கலவையான விமர்சனங்கள் கிடைத்திருக்கும் சூழலில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ஜவான் பட ட்ரெய்லரை பாராட்டியுள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “ஜவான் உலகம் ஸ்டன்னிங்காக இருக்கிறது. சகோதரர்கள் அட்லீயும், அனிருத்தும் சிறப்பாக ஹிந்தியில் அறிமுகமாகியிருக்கின்றனர்.விஜய் சேதுபதியின் லுக் எப்போதும் போல் பிரமிக்க வைக்கிறது. படக்குழுவுக்கு வாழ்த்துகள்””என குறிப்பிட்டுள்ளார்.