உதயநிதி ஸ்டாலின் அமைச்சரவையிலும் நான் இருப்பேன் என முன்பொருமுறை விளையாட்டாய் சொன்ன துரைமுருகன் தற்போது ஸ்டாலின் அமைச்சரவையிலேயே அதிருப்தியோடுதான் பயணிக்கிறார் என்கிறார்கள் திமுக உள்விவகாரம் அறிந்தவர்கள்.
திமுக – மக்களவைத் தேர்தல் பிளான்!மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில் திமுக கூட்டணியில் ஏற்கெனவே இருக்கும் அணிகள் தொடரவே அதிக வாய்ப்புகள் உள்ளன. பாரிவேந்தரின் ஐஜேகே கட்சிக்கு பதிலாக கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் இடம் பெற வாய்ப்புகள் உள்ளன. கடந்த முறை கொடுக்கப்பட்ட எண்ணிக்கையிலேயே இம்முறையும் தொகுதிகள் வழங்கப்படும் என்றும், எந்த தொகுதி என்பதில் மாற்றம் வரலாம் என்கின்றனர்.
வேலூர் தொகுதி வேட்பாளர் மாற்றம்?திமுகவை பொறுத்தவரை கடந்த முறை போட்டியிட்டவர்களுக்கு இம்முறையும் வாய்ப்பு வழங்கப்படுமா என்றால் சில சீனியர்களைத் தவிர்த்து வேட்பாளர் மாற்றம் கட்டாயம் இருக்கும் என்கிறார்கள். எனவே புதியவர்கள், தொகுதியில் செல்வாக்கு உள்ளவர்களுக்கு இம்முறை வாய்ப்பு வழங்கப்பட உள்ளது. வேலூர் தொகுதியில் வேட்பாளர் மாற்றப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகின்றன.
கதிர் ஆனந்துக்கு வாய்ப்பு இல்லையா?வேலூர் மக்களவை உறுப்பினராக இருப்பவர் அமைச்சர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த். இவருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்த்திருந்த துரைமுருகன் தற்போது அப்செட் ஆகியுள்ளாராம். வேலூரில் இம்முறையும் அதிமுக -பாஜக கூட்டணியில் ஏ.சி.சண்முகம் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. அமித் ஷா முன்னிலையிலேயே இது உறுதிபடுத்தப்பட்டது. கடந்த முறையும் கதிர் ஆனந்த் நூல் இழையில் தான் வெற்றி பெற்றார். கதிர் ஆனந்த் 4,85,340 வாக்குகளைப் பெற்ற நிலையில் ஏ.சி. சண்முகம் 4,77,199 வாக்குகள் பெற்றார். மக்களவைத் தேர்தலில் 8000 வாக்குகள் வித்தியாசம் என்பது மிக மிக குறைவு.
துரைமுருகன் அதிருப்தி!வெற்றி பெற்ற பின்னர் கதிர் ஆனந்த் ஆக்டிவாக செயல்படவில்லை என்ற பேச்சும் உள்ளது. தொகுதி பக்கம் எட்டிப் பார்க்காமல் மீண்டும் போட்டியிட்டால் வெற்றி சவாலானதாக மாறிவிடும் என்பதால் ஸ்டாலின் தரப்பு வேலூருக்கு வேறு ஆளை இறக்க முடிவு செய்துள்ளதாக கூறுகின்றனர். ஆனால் துரைமுருகன் தரப்போ தன்னை திட்டமிட்டு ஓரங்கட்டுவதாக நினைக்கிறதாம். இளைஞர் அணியிலும் தான் பரிந்துரைக்கும் ஆள்களுக்கு இடம் கொடுக்கப்படுவதில்லை, கட்சியின் பொதுச் செயலாளர், ஆனால் எனது மகனுக்கு சீட் வாங்கவே போராட வேண்டியிருக்கிறது என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் வேதனை தெரிவிப்பதாக சொல்கிறார்கள்.
ஸ்டாலின் திட்டம் என்ன?இது குறித்து விசாரிக்கையில் மேலும் சில தகவல்கள் கிடைக்கின்றன. “சீனியர்களுக்கு உரிய மரியாதை, கௌரவம் அளிப்பதில் ஸ்டாலின் எப்போதும் முன்மாதிரியாக செயல்படுகிறார். அதேசமயம் கட்சியிலும் ஆட்சியிலும் புது ரத்தம் பாய்ச்சப்பட வேண்டும், என்பதிலும் தீவிரம் காட்டுகிறார். இதனால் தான் தனது அமைச்சரவையில் மூத்தவரான துரைமுருகனுக்கு பெரிய இலாக்காக்கள் ஒதுக்கப்படவில்லை, நீர்வளத்துறையை மட்டுமே கொடுக்க முடிவெடுத்தார். பின்னர் துரைமுருகன்தான் கனிமவளத்துறையை கேட்டு சேர்த்து பெற்றார்.
அமைச்சரவை மாற்றம்!சீனியர்கள் கண்காணிப்பில் இளையவர்களுக்கு முன்னுரிமை அளித்து அவர்களை தீவிரமாக செயல்பட அனுமதிக்கும் போது கட்சியும், ஆட்சியும் அடுத்த பல ஆண்டுகள் தொய்வில்லாமல் போகும் என்பது ஸ்டாலினின் நிலைப்பாடாக இருக்கிறது” என்கிறார்கள். ஆனால் துரைமுருகனுக்கு தன்னிடம் முக்கிய விஷயங்களுக்கு அபிப்ராயங்கள் கேட்கவில்லையே என்ற வருத்தம் இருக்கிறதாம். அண்மையில் நடைபெற்ற அமைச்சரவை மாற்றத்தின் போதே இதை வெளிப்படுத்தினார்.
துரைமுருகன் நக்கல்!அமைச்சரவை மாற்றம் நடைபெறுவதற்கு முன்னர் அது தொடர்பான யூகங்கள் கிளம்பிக் கொண்டிருந்த போது, ‘அது பற்றி எனக்கு என்ன தெரியும், சித்தரஞ்சன் சாலையில் சென்று கேளுங்கள்’ என்று தனக்கே உரிய பாணியில் நக்கலாக சொன்னாலும் அதில் கட்சியின் பொதுச் செயலாளர் எனக்கு ஒன்றும் சொல்லப்படவில்லை என்ற ஆதங்கமும் சேர்ந்து வெளிப்பட்டது.
ஸ்டாலின் எடுக்கும் முடிவு!வேலூரில் வேட்பாளர் மாற்றப்படுவதாக முதற்கட்டமாக வெளியாகியிருக்கும் தகவல் துரைமுருகன் தரப்புக்கு அதிருப்தியை அளித்தாலும் அதை எப்படி மாற்றிக் காட்டுவது என்பதும் அவருக்கு தெரியும். ஸ்டாலினிடம் உணர்ச்சிப் பூர்வமாக பேசி தனது மகனுக்கு எப்படியும் வாய்ப்பு வேண்டும் என்று கேட்பார். ஸ்டாலினும் கடைசி நேரத்தில் அண்ணன் இவ்வளவு கேட்கிறாரே என்று சரி என்று கூறிவிடுவார் என்கிறார்கள் திமுக உள்விவகாரம் அறிந்தவர்கள்.