1,600 தொழிலாளர்களுடன் இரவு பகலாக அயோத்தி ராமர் கோயில் கட்டுமானப் பணிகள் தீவிரம்

அயோத்யா: உத்தர பிரதேசத்தில் ராமர் பிறந்த இடமான அயோத்தியில், ராமருக்கு பிரம்மாண்ட கோயில் கட்டப்பட்டு வருகிறது. 3 தளங்களை உடைய இந்தக் கோயில் சுமார் ரூ.1,800 கோடி செலவில் கட்டப்படுகிறது. கோயில் கட்டுமான பணிகளில் 1,600 தொழிலாளர்கள் 24 மணி நேரமும் ஈடுபட்டுள்ளனர்.

கோயில் கட்டுமானம் குறித்து, ஸ்ரீராம் ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை மேலாளர் ஜெகதீஷ் அபாலே கூறியதாவது: ராஜஸ்தானின் பன்சி பாஹர்பூரில் இருந்து எடுத்து வரப்பட்ட கற்கள் குடையப்பட்டு வருகின்றன. இவற்றைக் கொண்டு கோயில் கருவறை கட்டுமானப் பணிகள் நடைபெறுகின்றன. இந்தப் பணிகள் வரும் டிசம்பர் மாதத்துக்குள் முடிவடையும். தற்போது, கோயிலின் முதல் தளம் கட்டும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அடுத்தாண்டு ஜனவரிக்குள், கோயில் கட்டும் பணிகள் முழுவதுமாக முடிக்கப்படும். கோயிலின் கருவறையில் ராம் லல்லா (குழந்தை ராமர்) பிரதிஷ்டை செய்யப்படுவார். இவ்வாறு ஜெகதீஷ் அபாலே தெரிவித்தார்.

கோயில் கட்டுமானப் பணி குறித்து அறக்கட்டளை உறுப்பினர் காமேஷ்வர் சவுபா கூறியதாவது:

கோயிலின் தரை தளத்தில் 5 அரங்குகள் உள்ளன. கோயிலின் ஈர்ப்பு மையமாக மண்டபம் இருக்கும். பிரதான மண்டபத்தில் கடவுளின் கொடி எப்போதும் ஏற்றப்பட்டிருக்கும். கோயிலின் கீழ் தளத்தில் உள்ள 166 தூண்களில் சிலைகள் வடிக்கும் பணி நடைபெற்று வருகின்றன.

கருவறையில் உள்ள 6 தூண்கள் வெள்ளை மார்பிள் கற்களாலும், வெளிப்புறத் தூண்கள் இளஞ்சிவப்பு கற்களாலும் கட்டப்பட்டுள்ளன. தளத்தின் கட்டமைப்பு வரும் நாட்களில் தயாராகி விடும். மீதமுள்ள சிற்ப வேலைகள் 2025-ம் ஆண்டுக்குள் நிறைவடையும். 2024-ம் ஆண்டு சித்ரா ராமநவமியின் முதல் நாளில் ராமபிரானின் பிறந்தநாள் கொண்டாடப்படும். அன்று சரியாக 12 மணிக்கு, சூரிய கதிர்கள் ராம் லல்லா சிலையின் மீது சிறிது நேரம் விழும். அது பக்தர்களுக்கு தெய்வீக அனுபவமாக இருக்கும். இவ்வாறு காமேஷ்வர் சவுபா கூறினார்.

அறக்கட்டளை உறுப்பினர்களுள் ஒருவரான அனில் மிஸ்ரா, கோயில் திட்ட அதிகாரி ராதே ஜோஷி ஆகியோர் கூறும்போது, ‘‘மகர சங்கராந்திக்கு பிறகு பக்தர்கள் ராமபிரானை தரிசிக்கலாம்.கோயிலின் தரைதளத்தில் பெரும்பாலான பணிகள் முடிவடைந்தாலும், தளம், மின்விளக்கு மற்றும் இறுதிக்கட்ட பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை.

இரவு நேரத்தில் சிற்ப வேலைகள் மட்டுமே நிறுத்தப்படுகின்றன. கட்டுமானப் பணிகள் தொடர்ந்து 24 மணி நேரமும் நடைபெற்று வருகிறது. அடுத்த ஆண்டு ஜனவரியில் கோயில் திறப்பு விழா கோலாகலமாக நடைபெறவுள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.