சென்னை: பிரமாண்ட இயக்குநர் ராஜமௌலி தனது குடும்பத்துடன் தமிழ்நாட்டில் உள்ள கோயில்களுக்கு சென்ற புகைப்படங்கள் ட்ரெண்டாகியுள்ளன.
இந்தியாவின் பிரமாண்ட இயக்குநர்களில் ஒருவராக திகழ்பவர் ராஜமௌலி. நான் ஈ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த அவர் பாகுபலியை இயக்கியதன் மூலம் வெகு பிரபலமாகிவிட்டார். இதன் காரணமாக அவரது இயக்கத்தில் எப்படியாவது நடித்துவிட வேண்டும் என நடிகர்கள் போட்டிப்போட்டுக்கொண்டு இருக்கின்றனர். இவர் கடைசியாக ஆர்.ஆர்.ஆர் படத்தை இயக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
விதை ராஜமௌலி போட்டது: சரித்திர கால கதை வருவது இப்போது பெருகியிருக்கிறது. ஆனால் அதை எப்படி உருவாக்கி வியாபாரம் செய்ய வேண்டும் என்பதில் முதல் விதை போட்டவர் ராஜமௌலி. மணிரத்னமேகூட, பாகுபலி வரவில்லை என்றால் பொன்னியின் செல்வனை என்னால் எடுத்திருக்க முடியுமா என தெரியாது என ராஜமௌலியை புகழ்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
வசூலை அள்ளிய பாகுபலி: ராஜமௌலி இயக்கிய பாகுபலி படத்தின் முதல் பாகம் பிரமாண்ட வெற்றி பெற்றது 300 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்தது. அதேபோல் அந்தப் படத்தின் இரண்டாம் பாகமும் 500 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்தது. ஒவ்வொரு காட்சியையும் படு பிரமாண்டமாக படமாக்கியிருந்தார் ராஜமௌலி. இதன் காரணமாக படத்தின் நாயகன் பிரபாஸ் இப்போது ஒரு பான் இந்தியா ஆர்ட்டிஸ்ட்டாக வலம் வந்துகொண்டிருக்கிறார்.
ஆஸ்கரில் ஆர்.ஆர்.ஆர்: அதேபோல் கடைசியாக இவர் ஜூனியர் என்.டி.ஆர், ராம்சரணை வைத்து ஆர்.ஆர்.ஆர் படத்தை இயக்கினார். இந்தப் படம் மொத்தம் 1000 கோடி ரூபாயை வசூலித்தது. அதுமட்டுமின்றி ஆஸ்கர் ரேஸில் கலந்துகொண்டு, நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கர் விருதையும், கோல்டன் குளோப் விருதையும் வென்றது. இதனால் ராஜமௌலி உலக புகழ் பெற்ற இயக்குநராக் மாறியிருக்கிறார். ராஜமௌலி அடுத்ததாக மகேஷ் பாபுவை வைத்து படம் இயக்குகிறார்.
தமிழ்நாட்டு டூர்: இந்நிலையில் ராஜமௌலி தனது குடும்பத்துடன் தமிழ்நாட்டில் இருக்கும், பல கோயில்களுக்கும், இடங்களுக்கு சுற்றுலா வந்திருந்தார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “மத்திய தமிழ்நாட்டிற்கு நீண்ட நாட்களாக சாலை வழியாக பயணம் செய்ய விரும்பினேன். கோயில்களுக்குச் செல்ல விரும்பிய என் மகளுக்கு நன்றி. ஜூன் கடைசி வாரத்தில் ஸ்ரீரங்கம், தாராசுரம், பிரகதீஸ்வரர் கோயில், ராமேஸ்வரம், கானாடுகாத்தான், தூத்துக்குடி, மதுரை ஆகிய இடங்களுக்குச் சென்றிருந்தேன்.
கட்டடக்கலை: நேர்த்தியான கட்டடக்கலை, அற்புதமான பொறியியல் மற்றும் பாண்டியர்கள், சோழர்கள் நாயக்கர்கள் மற்றும் பல ஆட்சியாளர்களின் ஆழ்ந்த ஆன்மீக சிந்தனை உண்மையிலேயே மெய்சிலிர்க்க வைத்தது. மந்திரக்கூடம், கும்பகோணம் மற்றும் ராமேஸ்வரத்தில் உள்ள காக்கா ஹோட்டல் முருகன் மெஸ் என எல்லா இடங்களிலும் உணவு அருமையாக இருந்தது..
ஒரு வாரத்தில் 2-3 கிலோ எடைஅதிகரித்திருக்க வேண்டும். 3 மாத வெளிநாட்டு பயணம் மற்றும் உணவுக்குப் பிறகு, இந்த தாயகம் சுற்றுப்பயணம் புத்துணர்ச்சியையும் உற்சாகத்தையும் அளித்துள்ளது” என பதிவிட்டு அது தொடர்பான பு கைப்படங்களையும் பகிர்ந்திருக்கிறார். அந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளன.