கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில் இந்த திட்டத்தில் தலைமைச் செயலாளர், பிற துறைச் செயலாளர்கள், மாவட்ட ஆட்சியர்கள், உயர் அதிகாரிகள் மற்றும் அரசு ஊழியர்கள், தன்னார்வலர்கள் வரை ஒவ்வொருவருக்கும் என்னென்ன பணி வழங்கப்பட்டுள்ளது என்பது குறித்த விரிவான தகவல்கள் இடம்பெற்றிருந்தன.
விண்ணப்பங்கள் பெறுவது எப்படி?கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் விண்ணப்ப படிவங்கள் அந்தந்த ரேஷன் கடை ஊழியர்களால் வீடு வாரியாக சென்று வழங்கப்படும். கூட்ட நெரிசலை தவிரிக்கும் வகையில் ஒரு நாளைக்கு 60 பேர் ரேஷன் கடைகளுக்கு வந்து தங்கள் விவரங்களை அளிக்கவும், கை ரேகை பதியவும் ஏற்பாடு செய்யப்படுகிறது. அதை கணக்கிட்டு விண்ணப்ப படிவங்கள் வழங்கும் போதே தேதி, நேரம் ஆகியவை குறித்து வழங்கப்படும். விண்ணப்பம் பெற்றுக் கொண்டோம் என மக்கள் கையெழுத்திட்டு பெற்றுக் கொள்வது அவசியம்.
விண்ணப்பங்களை பதிவு செய்வது யார்?மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் பயன்படுத்தப்பட உள்ளனர். அவர்களே மக்களிடம் விண்ணப்பங்களை பதிவு செய்கின்றனர். ரேஷன் கடைகளில் அவர்களே மக்களிடம் விவரங்களை சேகரிக்கின்றனர். ஆதார் எண், வங்கி கணக்கு எண், கை ரேகை உள்ளிட்ட விவரங்களை இவர்கள் தான் சேகரித்து அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்வார்கள்.
விண்ணப்பிக்கும் நேரம் எப்போது?முதல் ஓரிரு நாள்கள் நாள் ஒன்றுக்கு ஒரு தன்னார்வலர் 60 விண்ணப்ப படிவங்களை பதிவார், நாளுக்கு நாள் வேகம் கிடைத்ததும் 80 படிவங்கள் வரை பதிவார். காலை 9:30 மணி முதல் 1 மணி வரையும், பிற்பகல் 2 மணி முதல் 5.30 மணி வரையும் நடத்தப்படும். ஞாயிற்றுக் கிழமைகளிலும் இந்தப் பணி தொடர்ந்து நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாருக்கு விண்ணப்ப படிவம் வீட்டில் வழங்கப்படாது?
பொது விநியோகத் திட்டத்தில் ரேஷன் பொருள்களை வாங்காத அட்டைதாரர்களுக்கு (NPHH -No Commodity (NC)), ரேஷன் கடை பணியாளர்கள் வீட்டுக்குச் சென்று விண்ணப்பங்கள் மற்றும் டோக்கன் வழங்க மாட்டார்கள். அத்தகைய குடும்பத்தினர் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் விண்ணப்பம் செய்ய விருப்பப்பட்டால், விண்ணப்பங்களை ரேஷன் கடைகளில் நேரடியாக சென்று பெற்றுக் கொண்டு விண்ணப்பிக்கலாம்.