கோயில்கள் சார்பில் நடத்தப்படும் அர்ச்சகர், ஓதுவார் பயிற்சிக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் – அறநிலையத்துறை அழைப்பு

சென்னை: கோயில்கள் சார்பில் நடத்தப்படும் அர்ச்சகர், ஓதுவார் பயிற்சி பள்ளிகளில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என இந்து சமய அறநிலையத்துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள கோயில்கள் சார்பில் நடத்தப்பட்டுவரும் அர்ச்சகர் மற்றும் ஓதுவார் பயிற்சிப் பள்ளிகள், தவில் மற்றும் நாதஸ்வர பயிற்சிப் பள்ளிகள், பிரபந்த விண்ணப்பர் பயிற்சிப் பள்ளி மற்றும் வேத ஆகம பாடசாலைகளில் பயிலும் மாணவர்களுக்கு உணவு, உறைவிட வசதிகளுடன் கட்டணமில்லா பயிற்சியும், ஊக்கத் தொகையும் வழங்கப்பட்டு வருகிறது.

அந்தவகையில் கோயில்கள் சார்பில் நடத்தப்படும் அர்ச்சகர் பயிற்சிப் பள்ளியில் சேர வயது வரம்பு 13 முதல் 24 வரையும், ஓதுவார் பயிற்சிப் பள்ளியில் சேர வயது வரம்பு 13 முதல் 20 வரையும், தவில் மற்றும் நாதஸ்வர பயிற்சிப் பள்ளியில் சேர வயது வரம்பு 13 முதல் 16 வரையும் இருக்க வேண்டும். வேத ஆகம பாடசாலையில் சேர வயது வரம்பு 12 முதல் 16 வரையும் மற்றும் பிரபந்த விண்ணப்பர் பயிற்சிப் பள்ளியில் சேர வயது வரம்பு 8 முதல் 18 வரையும் இருக்க வேண்டும்.

மாணவர் சேர்க்கைக்கான படிவங்களை அந்தந்த கோயில்களின் அலுவலகத்தில் அலுவலக வேலைநேரத்தில் நேரிலோ அல்லது அந்தந்த கோயில் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்தோ பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு https://hrce.tn.gov.in என்ற துறையின் இணையதளம் மூலம் அறிந்து கொள்ளலாம். இப்பயிற்சிப் பள்ளிகளில் சேர ஆர்வமுள்ள மாணவர்கள் விண்ணப்பித்து பயன் பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.