கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் கொடுங்குளம் தோட்டவரம்பு பகுதியை சேர்ந்தவர் விஜின்குமார்(36). ஆரம்பத்தில் ஆட்டோ ஓட்டுநராக இருந்தவர், சமீப காலமாக மினிபஸ் டிரைவராக வேலை செய்துவந்தார். இவருக்கு 16 ஆண்டுகளுக்கு முன்பு சந்தியா என்ற பெண்ணுடன் திருமணம் நடந்து 3 பிள்ளைகளும் உள்ளனர். மூத்த மகனுக்கு 15 வயதாகிறது மற்ற இரண்டு பிள்ளைகளும் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்கள். கருத்துவேறுபாடு காரணமாக அவரின் மனைவி பெற்றோர் வீடான பாகோட்டில் வசித்துவருகிறார்.
விஜின் குமார் ஆட்டோ ஓட்டுநராக பணிபுரிந்த போது பல பெண்களிடம் தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் முதல் மனைவியை சட்டப்படி விவகாரத்து செய்யாமல் கடந்த மாதம் 12-ம் தேதி 18 வயது பெண் ஒருவரை திருமணம் செய்துள்ளார் விஜின்குமார். இதுகுறித்து முதல் மனைவி சந்தியா மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
விஜின்குமார் மற்றும் அவருக்கு திருமணம் செய்துவைத்த ஈத்தவிளை பகுதியைச் சேர்ந்த மத போதகர் பிரின்ஸ் மற்றும் திருமணத்துக்கு உதவிய சிவகுமார், சுரேஷ் ஆகியோர் மீது மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இதையடுத்து விஜின்குமார், சபை போதகர் உள்பட அனைவரும் தலைமறைவாயினர். தனிப்படை அமைத்து தேடிய போலீஸார் வேளாங்கண்ணியில் தலைமறைவாக இருந்த விஜின்குமாரை கைது செய்தனர். சபை போதகர் உள்ளிட்ட மூவரையும் போலீஸார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.
விஜின்குமாரிடம் போலீஸார் விசாரணை நடத்தியதில் விஜின்குமார் குறித்த பல தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த ஆறு மாதங்களுக்கு முன் மினி பஸ் ஓட்டுநராக பணிபுரிந்த போது பஸ்ஸில் வரும் கழுவந்திட்டை பகுதியைச் சேர்ந்த வேறொருவருடன் திருமணம் ஆன ஒரு பெண்ணிடம் நட்பாக பழகியுள்ளார். அந்த பெண்ணை கணவரிடம் இருந்து பிரித்து தன்னுடன் அழைத்துச்செல்ல முயன்றுள்ளார். இதை அறிந்த பெண்ணின் உறவினர்கள் விஜின்குமாரை தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும், மத போதகரான பிரின்ஸ் குறித்தும் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.