கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் மூலம் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கப்பட உள்ளது. தமிழ்நாடு முழுவதும் பெரிதும் எதிர்பார்க்கப்படும் இத்திட்டம் செப்டம்பர் 15ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது.
இதற்காக 7000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. செப்டம்பர் முதல் மார்ச் வரை மாதம் 1000 கோடி ரூபாய் என்ற கணக்கில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஒரு கோடி பேரை இந்த திட்டத்தில் இணைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளையும் அரசாணையையும் தமிழக அரசு வெளியிட்டது.
இந்நிலையில் உணவு பாதுகாப்பு துறை மூலம் அனைத்து ரேஷன் கடைகளுக்கும் முக்கிய உத்தரவுகள் சென்றுள்ளன. கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அவர்களது ரேஷன் அட்டைகள் உள்ள ரேஷன் கடைகளுக்கு செல்ல வேண்டும். அங்கு அவர்களிடமிருந்து தேவையான விவரங்கள் பெறப்பட்டு இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் மூலம் பதிவு செய்யப்படும். அப்போது விண்ணப்பதாரர்களின் கை ரேகை கட்டாயம் பதிவு செய்யப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரேஷன் கடைகளில் ஏற்கெனவே பயோ மெட்ரிக் மிஷின்கள் பயன்பாட்டில் இருக்கின்றன. சில நேரங்களில் அவற்றில் பழுது ஏற்பட்டு விடுகிறது. இந்நிலையில் தற்போது அனுப்பபட்டுள்ள சுற்றறிக்கையில் ஜூலை 17ஆம் தேதிக்குள் பயோ மெட்ரிக் மிஷின்களை சரியாக செயல்படும் வகையில் தயார்படுத்தி வைத்திருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.