பெங்களூரு: இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கனுக்கு இலங்கையில் மாரடைப்பு ஏற்பட்டதால், அவர் பெங்களூரு அழைத்துவரப்பட்டு அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இஸ்ரோ முன்னாள் தலைவரும், தேசிய கல்விக் கொள்கையின் தலைவருமான கஸ்தூரி ரங்கன் (83) தனியார் அமைப்பின் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக கடந்த வாரம் இலங்கை சென்றிருந்தார். அங்கு அவருக்கு கடந்த திங்கள்கிழமை காலையில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்நிலையில் அங்கு விரைந்த அவரது குடும்பத்தினர் கொழும்பில் இருந்து பெங்களூருவுக்கு அழைத்துவர முடிவெடுத்தனர். அதன்படி நேற்று முன் தினம் மாலை ‘ஏர் ஆம்புலன்ஸ்’ மூலம் கஸ்தூரி ரங்கனை பெங்களூருவில் உள்ள ஹெச்.ஏ.எல்.விமான நிலையத்துக்கு அழைத்து வந்தனர்.
அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் ஓசூர் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மருத்துவர் தேவி ஷெட்டி தலைமையிலான மருத்துவக் குழுவினர் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்நிலையில் மருத்துவமனை நிர்வாகம், கஸ்தூரி ரங்கன் நலமாக இருப்பதாக அறிக்கை வெளியிட்டுள்ளது. இதனிடையே கஸ்தூரி ரங்கன் விரைவில் குணமடைய முதல்வர் சித்தராமையா வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.