அமலாக்கத்துறை: “சஞ்சய் மிஸ்ராவின் பதவியை நீட்டிக்க அவசியம் என்ன?" – பாஜக-வுக்கு சீமான் கேள்வி!

அமலாக்கத்துறையின் இயக்குநராக 2018-ல் நியமிக்கப்பட்ட சஞ்சய் குமார் மிஸ்ராவின் பதவிக்காலம் 2020-லேயே முடிவடைந்த பிறகும் கூட அவரது பதவிக்காலத்தை 2021, 2022-ல் தலா ஓராண்டு என இருமுறை நீட்டித்த மத்திய அரசு தற்போது மூன்றாவது முறையாக அவரின் பதவிக்காலத்தை ஓராண்டு நீட்டித்திருக்கிறது. `பா.ஜ.க எதற்கு சஞ்சய் குமார் மிஸ்ராவின் நீட்டித்துக்கொண்டே வருகிறது’ என்றெல்லாம் எதிர்க்கட்சிகள் கேள்வியெழுப்பின.

அமித் ஷா, மோடி – சஞ்சய் குமார் மிஸ்ரா

இதுமட்டுமல்லாமல், காங்கிரஸின் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, திரிணமுல் காங்கிரஸின் மஹூவா மொய்த்ரா ஆகியோர் சஞ்சய் குமார் மிஸ்ரா விவகாரத்தில் மத்திய அரசின் நடவடிக்கையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தனர். இதனை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி ஆர்.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வு, “சஞ்சய் குமார் மிஸ்ராவின் பதவி நீட்டிப்பு சட்டவிரோதமானது. மத்திய அரசுக்கு அதிகாரம் உண்டு என்றாலும் அவர் ஜூலை 31-ம் தேதி வரை மட்டும்தான் நீடிக்க முடியும். அதன் பிறகு அவர் பதவியில் நீடிக்கக் கூடாது” என்று தெரிவித்தது.

இந்த நிலையில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், சஞ்சய் குமார் மிஸ்ராவின் பதவி நீட்டிப்பு குறித்து பா.ஜ.க அரசு மீது அடுக்கடுக்காக கேள்வியெழுப்பியிருக்கிறார். இது குறித்து அறிக்கை வெளியிட்டிருக்கும் சீமான், “அமலாக்கத்துறை இயக்குநர் சஞ்சய் குமார் மிஸ்ராவுக்கு பா.ஜ.க அரசு மூன்றாவது முறையாக வழங்கிய முறைகேடான பதவி நீட்டிப்புக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கில், அவரது நியமனம் சட்டவிரோதமானது என்று தீர்ப்பளித்திருக்கிறது உச்சநீதிமன்றம்.

சீமான்

அமலாக்கத்துறை இயக்குநரின் நியமனமே சட்டவிரோதம் எனில், சட்டவிரோதமாக நியமிக்கப்பட்ட இயக்குநரின் உத்தரவுப்படி அமலாக்கத்துறை தொடுத்த வழக்குகள், எடுத்த கைது நடவடிக்கைகள் அனைத்துமே சட்டவிரோதமானது இல்லையா? அவையெல்லாம் தொடருமா? அல்லது ரத்து செய்யப்படுமா? அமலாக்கத்துறை எந்தவொரு தனிநபரையும் சார்ந்ததல்ல என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியிருக்கிறார். அப்படியென்றால் சஞ்சய் குமார் மிஸ்ரா தனிநபர் இல்லையா? கடந்த 2020-ம் ஆண்டு முதல் மூன்றுமுறை அவருக்கு பதவி நீட்டிப்பு வழங்க வேண்டிய அவசியம் என்ன வந்தது? பாசிச பா.ஜ.க அரசின் ஒட்டுமொத்த எதேச்சதிகாரச் செயல்பாட்டின் ஒற்றை வடிவம் சஞ்சய் மிஸ்ரா என்பதால் பதவி நீட்டிப்பு செய்யப்பட்டதா?” என்று கேள்வியெழுப்பியிருக்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.