இலங்கை சமூகத்தில் ஒற்றுமையை மேம்படுத்துவதற்கு அரசகரும மொழிக் கொள்கையை நடைமுறைப்படுத்த வேண்டும் 

அரச கரும மொழிக் கொள்கையை விரைவாக நடைமுறைப்படுத்துவது பல மொழி பேசும் இலங்கை சமூகத்தில் ஒற்றுமையை மேம்படுத்தும் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார். சம்பந்தப்பட்ட அனைத்து நிறுவனங்களும் திணைக்களங்களும் இது தொடர்பில் பயனுள்ள நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென அவர் வலியுறுத்தினார்.

கொழும்பில் (10) நடைபெற்ற தேசிய மொழிகள் சமத்துவ மேம்பாட்டுச் செயற்றிட்டத்தினால் (NLEAP) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கருத்தரங்கில் உரையாற்றிய அவர், பல்வேறு சமூகங்களை உள்ளடக்கிய எந்தவொரு தேசத்தின் ஒற்றுமையும், ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ளும் திறனைப் பொறுத்தே அமையும் என்று குறிப்பிட்டார். மொழி என்பது மக்களின் மறுக்க முடியாத உரிமையும் கூட. தொடர்பாடல் உரிமைகளில் கருத்துச் சுதந்திரம், ஒருவரின் சொந்த கலாச்சாரத்தில் பங்கேற்கும் உரிமை, மொழியியல் உரிமைகள், கல்விக்கான உரிமைகள், தனியுரிமை மற்றும் ஒன்றுகூடல் உரிமை ஆகியவை அடங்கும் என்றார்.

“நான் இன்று கேல் ஃபேஸ் ஹோட்டலில் இருக்கிறேன், ஒரு வருடத்திற்கு முன்பு காலி முகத்திடலில் உள்ள இந்த இடத்திற்கு வெளியே அராஜகம் காணப்பட்டது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையின் கீழ், மக்களின் ஆதரவுடன் நாட்டில் சட்டம் ஒழுங்கை மீட்டெடுக்கவும் மேலும் பொருளாதார ஸ்திரத்தன்மையை மீட்டெடுக்கவும் முடிந்ததை நான் இங்கு நினைவு கூர்கிறேன்” என்றார்.

NLEAP திட்டத்திற்கு வழங்கப்பட்ட நிதியுதவிக்கு கனடா அரசாங்கத்திற்கு நன்றி தெரிவித்த பிரதமர், தேசிய மொழிப் பாவனையில் சமமான முன்னேற்றம் என்ற இலக்கை அடைய இலங்கைக்கு உதவும் திட்டத்தை விரிவுபடுத்துவதற்கான அவரது ஆதரவிற்காக உயர் ஸ்தானிகர் எரிக் வால்ஷுக்கு நன்றி தெரிவித்தார்.

இலங்கையின் அரச கரும மொழிக் கொள்கையின் நோக்கமானது, நாட்டில் கலாசாரப் பன்முகத்தன்மை பற்றிய ஏற்பை பெண்கள் மற்றும் ஆண்கள் உட்பட அனைத்து இலங்கையரிடமும் மேம்படுத்துவதாகும் என்றார்.

“தொடர்பாடல் தடைகளை வெற்றிகொள்வது விரைவான பொருளாதார அபிவிருத்திக்கும் அபிவிருத்தியில் சீரான தன்மையை உறுதி செய்வதற்கும் உதவுகிறது. அது வறுமையைக் குறைப்பதற்கும், இலங்கை முழுவதிலும் உள்ள சிங்களம் மற்றும் தமிழ் பேசும் பெண்கள் மற்றும் ஆண்களின் பொருளாதார மற்றும் சமூக சமத்துவத்தை மேம்படுத்துவதற்கும் உதவுகிறது,” என குறிப்பிட்டார்.

NLEAP திட்டமானது கல்வியாளர்கள், மாணவர்கள் மற்றும் தொழில் வல்லுநர்கள் இலங்கையின் பன்மொழி இயல்பு மற்றும் பாலின அடிப்படையிலான தடைகள் தொடர்பான குறிப்பிட்ட சவால்களில் கவனம் செலுத்துவதற்கும் அவற்றுக்கான தீர்வுகளைக் காண்பதற்கும் ஒரு மன்றமாக செயல்பட்டதாக தேசிய மொழிகள் சமத்துவ முன்னேற்றத் திட்டத்தின் பணிப்பாளர் மைக்கல் எம்ப்ளம் தெரிவித்தார்.

இருமொழி நாடு என்ற வகையில் கனடா தனது அனுபவங்களை NLEAP திட்டத்தின் மூலம் இலங்கையுடன் பகிர்ந்து கொண்டுள்ளதாக கனேடிய உயர் ஸ்தானிகர் எரிக் வால்ஷ் தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா, குலசிங்கம் திலீபன் மற்றும் பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் ரஞ்சித் அசோக, இராஜதந்திரிகள், அதிகாரிகள், கல்விமான்கள் மற்றும் மாணவர்கள் இக்கருத்தரங்கில் கலந்துகொண்டனர்.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.