புதுடெல்லி: மாநில பேரிடர் மீட்பு நிதிகளுக்காக 22 மாநில அரசுகளுக்கு ரூ.7,532 கோடியை மத்திய நிதியமைச்சகத்தின் செலவினத் துறை புதன்கிழமை விடுவித்துள்ளது.
உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரையின்படி, இந்த நிதி விடுவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தமிழகத்துக்கு ரூ.450 கோடி, ஆந்திரப் பிரதேசத்துக்கு ரூ.493.60 கோடி, கர்நாடகாவுக்கு ரூ.348.80 கோடி, கேரளாவுக்கு ரூ.138.80 கோடி, தெலங்கானாவுக்கு ரூ.188.80 கோடி, இமாச்சலப் பிரதேசத்துக்கு ரூ.180.40 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் பெய்துவரும் கனமழை காரணமாக, கடந்த ஆண்டு மாநிலங்களுக்கு வழங்கப்பட்ட நிதியை பயன்படுத்தியது குறித்த சான்றிதழுக்கு காத்திருக்காமல், மாநிலங்களுக்கு உடனடியாக நிதியை விடுவிக்கும் வகையில், வழிகாட்டி நெறிமுறைகள் தளர்த்தப்பட்டுள்ளன.
முன்னதாக, வட மாநிலங்களில் கனமழை தொடரும் சூழலில் செவ்வாய்க்கிழமை மட்டும் 20 பேர் உயிரிழந்தனர். இதனால் வடமாநிலங்களில் மழை, வெள்ள பாதிப்புகளால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 100 ஆக அதிகரித்துள்ளது.
இமாச்சலப் பிரதேசத்தில் மட்டும் பலி எண்ணிக்கை நேற்று ஒரே நாளில் 31 ஆகப் பதிவாகியிருந்தது. இதுவரை அங்கு பருவமழைக் காலம் தொடங்கியதிலிருந்து 80 பேர் உயிரிழந்துள்ளனர். உத்தராகண்டில் 5, உத்தரப் பிரதேசம், பஞ்சாப், ராஜஸ்தானில் தலா ஒன்று என உயிர்ப்பலிகள் பதிவாகியுள்ளன. | விரிவாக வாசிக்க > வட மாநிலங்களில் கனமழை – உயிரிழந்தோர் எண்ணிக்கை 100 ஆக அதிகரிப்பு