தமிழகத்தில் 6.10 கோடி வாக்காளர்கள்: தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

சென்னை: “ஜூலை 10ம் தேதி வெளியிடப்பட்டுள்ள வாக்காளர் பட்டியலின்படி தமிழகத்தில் 6,10,39,316 வாக்காளர்கள் உள்ளனர். இதில், ஆண் வாக்காளர்கள் 3,00,29,237; பெண் வாக்காளர்கள் 3,10,02,098; மற்றும் மூன்றாம் பாலினத்தவர் 7,981 பேர் பதிவு செய்யப்பட்டுள்ளனர்” என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: இந்தியத் தேர்தல் ஆணையம், ஜனவரி 1-ல் மட்டுமல்லாது, ஏப்ரல் 1, ஜுலை 1 மற்றும் அக்டோபர் 1 ஆகிய மூன்று தொடர்ச்சியான தகுதியேற்படுத்தும் நாட்களில் இளைஞர்கள் அவர்களது விண்ணப்பங்களை முன்கூட்டியே வழங்குவதற்கு அறிவுறுத்தியுள்ளது.

இனி, ஒவ்வொரு காலாண்டிலும் வாக்காளர் பட்டியல் புதுப்பிக்கப்படும் மற்றும் 18 வயது நிறைவடைந்த ஆண்டின் அடுத்த காலாண்டில் தகுதியான இளைஞர்கள் தங்களைப் பதிவு செய்து கொள்ளலாம். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கைக்குப் பிறகு, உரியவருக்கு வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை வழங்கப்படும்.

01.07.2023-ஐ தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட தொடர் திருத்தக் காலம், 2023 (காலாண்டு 3)-இன் வாக்காளர் பட்டியல் 10.7.2023 அன்று வெளியிடப்பட்டுள்ளன. மேற்கண்ட தொடர் திருத்தக் காலம், 2023 (காலாண்டு 3)-இன்போது வாக்காளர் பட்டியலில் புதிய வாக்காளர்களாக 1,39,108 நபர்களின் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன மற்றும் 27,332 வாக்காளர்கள் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு முகவரி மாற்றம் செய்துள்ளனர். 3,42,185 வாக்காளர்களின் பெயர்கள் இடப்பெயர்ச்சி, இறப்பு மற்றும் இரட்டைப் பதிவு ஆகிய காரணங்களுக்காக நீக்கப்பட்டுள்ளன. மேலும், 1,04,141 வாக்காளர்களின் பதிவுகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

தொடர் திருத்தக் காலம், 2023 (காலாண்டு 3)-இன் (10.7.2023) வாக்காளர் பட்டியலின்படி தமிழகத்தில் 6,10,39,316 வாக்காளர்கள் (ஆண் வாக்காளர்கள் 3,00,29,237; பெண் வாக்காளர்கள் 3,10,02,098; மற்றும் மூன்றாம் பாலினத்தவர் 7,981 பேர்) பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

வாக்காளர் பட்டியலினை, தலைமைத் தேர்தல் அதிகாரியின் வலைதளமான https://elections.tn.gov.in/ என்ற வலைதளத்திலும் காணலாம். அதில் வாக்காளர்கள் தங்கள் பெயரைச் சரிபார்த்துக் கொள்ளலாம்.

இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, வாக்குச்சாவடி நிலை அலுவலர்களாரல் வீடு வீடாக சென்று வாக்காளர்களை சரிபார்க்கும் பணி வருகின்ற 21.07.2023 முதல் தொடங்கப்பெறும், என்று அவர் கூறியுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.