புதுடெல்லி: காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் ஆகஸ்ட் 2 முதல் தினமும் விசாரணை நடத்தப்படும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்தது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் 23 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இவை ஒரே வழக்காக விசாரிக்கப்படுகிறது.
இந்த வழக்கில் மத்திய அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் நேற்றுமுன்தினம் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது:
சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து ஜம்மு காஷ்மீரில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு அமைதி திரும்பி உள்ளது. கடந்த 2018-ம் ஆண்டில் காஷ்மீரில் 1,767 கல்வீச்சு சம்பவங்கள் நடைபெற்றன. நடப்பாண்டில் இதுவரை கல்வீச்சு சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை.
பள்ளி, கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், மருத்துவமனைகள், வர்த்தக நிறுவனங்கள் இயல்பாக செயல்படுகின்றன. சுற்றுலாபயணிகளின் வருகை அதிகரித்து மக்களின் வருவாய் பெருகியுள்ளது. முன்னெப்போதும் இல்லாத அமைதி, வளர்ச்சி, ஸ்திரத்தன்மை ஏற்பட்டிருக்கிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதிகள் எஸ்.கே.கவுல், சஞ்சீவ்கன்னா, பி.ஆர்.கவாய், சூர்யகாந்த் அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட பிறகு தலைமை நீதிபதி சந்திரசூட்கூறும்போது, ‘‘வழக்கில் தொடர்புடைய அனைத்து தரப்பினரும் தங்கள் தரப்பு விளக்கங்கள், ஆதாரங்களை வரும் 27-ம் தேதிக்குள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல்செய்ய வேண்டும். வரும் ஆகஸ்ட் 2-ம் தேதி முதல் திங்கள்,வெள்ளிக்கிழமை தவிர்த்து நாள்தோறும் விசாரணை நடத்தப்படும்” என்று உத்தரவிட்டார்.
ஐஏஎஸ் அதிகாரி உட்பட 2 பேரின் மனுக்கள் வாபஸ்: கடந்த 2009-ம் ஆண்டு குடிமைப் பணி தேர்வில் காஷ்மீரை சேர்ந்த ஷா பைசல் முதலிடம் பிடித்து ஐஏஎஸ் அதிகாரியாக பணியில் சேர்ந்தார். கடந்த 2019-ல் அரசு பணியில் இருந்து விலகிய அவர், புதிதாக அரசியல் கட்சியை தொடங்கினார். அப்போது காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அவர் மனு தாக்கல் செய்தார்.
கடந்த 2022 ஆகஸ்டில் அரசியலில் இருந்து விலகிய அவர் மீண்டும் மத்திய அரசு பணியில் இணைந்தார். இதையடுத்து காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து தொடர்ந்த வழக்கை அவர் வாபஸ் பெற்றுள்ளார்.
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் முன்னாள் துணைத் தலைவர் ஷீலா ரஷீத்தும், காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அவரும் தனது மனுவை வாபஸ் பெற்றிருக்கிறார்.