கரூர்: வீரணம்பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி குடிநீர் தொட்டியில் மர்ம திரவம் கலக்கப்பட்டது தொடர்பாக எஸ்.பி. வட்டாட்சியர் ஆய்வு செய்தனர்.
கரூர் மாவட்டம் கடவூர் வட்டம் தரகம்பட்டி அருகே மேலப்பகுதி ஊராட்சி வீரணம்பட்டியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி உள்ளது. இங்கு 159 மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். பள்ளி வளாகத்தில் 3 குடிநீர் தொட்டிகள் உள்ளன. இன்று (ஜூலை 12ம் தேதி) காலை பள்ளிக்கு வந்த மாணவர்கள் தண்ணீர் குடிப்பதற்காக அங்கிருந்த ஒரு குடிநீர் தொட்டி குழாயை திறந்துள்ளனர். தண்ணீரில் துர்நாற்றம் வீசியுள்ளது.
இதனால் அருகில் உள்ள மற்றொரு குடிநீர் தொட்டி குழாயை திறந்து உள்ளனர். அப்போது அந்த குடிநீரிலும் துர்நாற்றம் வந்துள்ளது. இதையடுத்து 3வது குடிநீர் தொட்டி குழாயை திறந்த போது அதிலும் துர்நாற்றம் வந்துள்ளது. இதுகுறித்து மாணவர்கள் தலைமை ஆசிரியர் ஜேசுராஜிடம் தெரிவித்ததை அடுத்து மாணவர்கள் யாரும் தண்ணீர் அருந்த அனுமதிக்கப்படவில்லை. மேலும் இதுதொடர்பாக சிந்தாமணிப்பட்டி காவல் நிலையத்தில் தலைமை ஆசிரியர் ஜேசுராஜ் புகார் அளித்தார்.
இதையடுத்து கடவூர் வட்டாட்சியர் முனிராஜ், குளித்தலை டிஎஸ்பி ஸ்ரீதர், மேலப்பகுதி ஊராட்சிமன்றத் தலைவர் மாணிக்கம், மைலம்பட்டி வருவாய் ஆய்வாளர் நெப்போலியன் சம்பவ இடத்தில் ஆய்வு செய்து, சுகாதாரத்துறையினர் மூலம் நீர் மாதிரிகளை சேகரித்தனர். அதனை தொடர்ந்து எஸ்.பி. சுந்தரவதனம் ஆய்வு செய்து விசாரணை நடத்தி தடயவியல் நிபுணர்கள் சரண்யா, பவதாரணி ஆகியோரை வரவழைத்தார். அவர்கள் குடிநீர் தொட்டியில் இருந்து தடயங்களை சேகரித்தனர்.
தடயங்களின்படி சோப்பு ஆயில் போன்ற மர்ம திரவம் நீரில் கலக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது. எனினும், சுகாதாரத்துறையினர் ஆய்வு மற்றும் தடயவியல் துறை முடிவுகள் அடிப்படையில் குடிநீரில் என்ன கலந்துள்ளது என கண்டறியப்படும்.
இந்நிலையில் ஊராட்சி நிர்வாகம் சார்பில் தொட்டிகளில் இருந்து குடிநீர் வெளியேற்றப்பட்டு சுத்தப்படுத்தப்பட்டது. கடந்த ஜூன் மாதம் 7ம் தேதி வீரணம்பட்டி காளியம்மன் கோயிலில் பட்டியல் சமூகத்தை சேர்ந்த இளைஞரை அனுமதிக்காத பிரச்சினை காரணமாக அதிகாரிகள் கோயிலை பூட்டி சீல் வைத்தனர். பலகட்ட போராட்டங்களுக்கு பிறகு கடந்த ஜூன் 21ம் தேதி கோயில் சீல் அகற்றப்பட்டு பட்டியலினத்தவர் கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் அங்குள்ள பள்ளி குடிநீர் தொட்டியில் மர்ம திரவப் பொருள் கலக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.