இரவு நேர பாடசாலை : காமராஜர் பிறந்தநாளில் விஜய்யின் அடுத்த அரசியல் ‛மூவ்'
நடிகர் விஜய் லியோ படத்தில் தான் சம்மந்தப்பட்ட காட்சிகளில் நடித்து முடித்துள்ளார். மறுபக்கம் தனது அரசியல் பயணத்திற்கான பணிகளை செய்து வருகிறார். சமீபகாலமாக அவருடைய ஒவ்வொரு நகருவும் அரசியல் நோக்கி வேகமாக பயணிக்க வைக்கிறது. நேற்று கூட விஜய் மக்கள் இயக்கத்தில் உள்ள முக்கிய நிர்வாகிகளை சந்தித்துள்ளார். அப்போது எதிர்வரும் தேர்தல் பற்றியும் ஆலோசித்துள்ளார்.
ஏற்கனவே விஜய் மக்கள் இயக்கம் சார்பில் குருதியகம், விலையில்லா விருந்தகம் போன்ற நற்பணிகளை செய்து வருகின்றனர். சமீபத்தில் தொகுதி வாரியாக 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வில் முதல் மூன்று இடங்களை மாணவர்களை அழைத்து பாராட்டி கவுரவித்தார். இப்போது அடுத்த அதிரடியாக பள்ளி மாணவ, மாணவிகளுக்காக களமிறங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அந்த தகவலின்படி, ஜூலை 15ம் தேதி காமராஜர் பிறந்தநாளில் இருந்து தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் கிராமங்களில் உள்ள ஏழை, எளிய மாணவ, மாணவிகளுக்கு கல்விக்கு பயன் தரும் வகையில் இரவு நேர பாடசாலைகளை விஜய் மக்கள் இயக்கம் மூலம் விஜய் செயல்படுத்த உள்ளார் என்கிறார்கள். இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2வது நாளாக விஜய் ஆலோசனை
நடிகர் விஜய் தனது பனையூர் அலுவலகத்தில் மக்கள் இயக்க நிர்வாகிகளை நேற்று முதல் சந்தித்து வருகிறார். இன்று(ஜூலை 12) இரண்டாவது நாளாகவும் அவர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார். குறிப்பாக அவர் தொடங்க உள்ள இரவுநேர பாடசாலை பற்றி இன்று முக்கியமாக ஆலோசித்ததாக கூறப்படுகிறது. மேலும் அரசியல் தொடர்பான விஷயங்களையும் அவர் பேசி உள்ளாராம்.