நெல்லை: நெல்லையில் அரசு பேருந்தில் நீதிபதி பயணிப்பதை அறியாமல் பயணிகளிடம் டிக்கெட்டுக்கு கூடுதலாக ரூ 5 வசூலித்த நிலையில் நடத்துநரை நீதிமன்றத்திற்கு அழைத்து கண்டித்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை புதிய பேருந்து நிலையத்திலிருந்து திருச்செந்தூருக்கு சென்ற அரசு பேருந்து நேற்றைய தினம் கிளம்பியது. அப்போது அந்த பேருந்தில் நாங்குநேரியை சேர்ந்த பார்வதிநாதன் உள்ளிட்டோர் பயணம் செய்துள்ளனர்.
பார்வதிநாதன் உள்ளிட்டோர் நெல்லை மாவட்ட நீதிமன்றத்திற்கு நுகர்வோர் வழக்கு தொடர்பாக வாய்தாவுக்காக சென்றுள்ளனர். அரசு பேருந்தில் மேற்கண்ட வழித்தடத்தில் சென்றால் நெல்லை நீதிமன்றத்திற்கு ரூ 10 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
ஆனால் இந்த பேருந்தில் இருந்த நடத்துநர் ரூ 10 க்கு பதிலாக ரூ 15 பயணச்சீட்டை கொடுத்துள்ளார். இதை பார்த்து அதிர்ந்த பார்வதிநாதன் உள்ளிட்டோர் ரூ 10 பயணச்சீட்டுத்தானே கொடுக்க வேண்டும், எதற்காக ரூ 15 பயணச்சீட்டை கொடுக்கிறீர்கள் என கேட்டுள்ளனர். அப்போது நடத்துநருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து பார்வதிநாதன் உள்ளிட்டோரை குலவணிகர்புரம் ரயில்வே கேட் அருகே பேருந்திலிருந்து கீழே இறங்கபமாறு வற்புறுத்தியதாக தெரிகிறது. அப்போது அந்த பேருந்தில் இருந்த நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி கிளாட்ஸ்டோன் பிளஸ்ட் தாகூர் அங்கு நடந்த சம்பவங்களை பார்த்துக் கொண்டே இருந்தார்.
அவர் யார் என தெரியாமல் அவரிடமும் ரூ 10 பெற்றுக் கொண்டு ரூ 16 பயணச்சீட்டை நடத்துநர் கொடுத்துள்ளார். நீதிமன்றம் நிறுத்தம் வந்ததும் பேருந்தில் இருந்து பிளஸ்ட் இறங்கிவிட்டார். இதையடுத்து நீதிமன்ற அறையில் போக்குவரத்து கழக அதிகாரிகளை வரவழைத்து பார்வதிநாதன் உள்ளிட்டோரையும் வரழைத்து நடந்தவற்றை கூறுமாறு தெரிவித்தார்.
இதே போல் தொடர்ந்து கொண்டிருந்தால் போக்குவரத்து கழகத்திற்கு ரூ 1 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என அவர் எச்சரிக்கை விடுத்தார். நேற்று பேருந்தில் நடந்த சம்பவங்கள் அனைத்தையும் பயணி ஒருவர் செல்போனில் வீடியோ பதிவாக எடுத்து அதை சமூகவலைதளங்களில் பதிவிட்டுள்ளார். பேருந்தில் நடந்த பிரச்சினை தொடர்பாக ஓட்டுநர், நடத்துநர், போக்குவரத்து அதிகாரிகள் மீது வழக்கு தொடர போவதாக பார்வதிநாதன் தெரிவித்தார்.
வந்திருப்பது நீதிபதி என தெரியாமல் அவரிடமே கூடுதல் கட்டண பயணச்சீட்டை நடத்துநர் ஒப்படைத்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது போல் நடத்துநர் மீது போக்குவரத்து துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.