மனித உறவுச் சிக்கலின் பல்வேறு பரிமாணங்களைத் திரையில் உலவ விட்ட இயக்குநர்களுள் முக்கியமானவர் கே.பாலசந்தர். சர்ச்சையான உள்ளடக்கத்தை கலாசார சேதம் பெரிதும் இல்லாத அளவிற்குத் திரைப்படமாக்கியவர். இரண்டு அன்பு உறவுகளின் இடையில் சிக்கித் தவிக்கும் ஆண், ‘பொசஸிவ்னெஸ்’ கொண்ட மனைவியிடம் மாட்டிக் கொண்டு தவிக்கும் ஆண் என்று பல்வேறு சித்திரங்களை அளித்தவர். இந்த நோக்கில் பாலசந்தர் மற்றும் பாலுமகேந்திரா இயக்கிய சில படங்களில் பொதுத்தன்மையைக் காண முடியும்.
ஆனால் இவை பெரும்பாலும் ஆண் மைய நோக்கிலேயே இருந்தன. ரசனையே அற்ற மனைவியைச் சகித்துக் கொள்ள முடியாமல், இசையார்வம் அதிகமுள்ள ஒரு பெண்ணிடம் காதலில் விழுகிறான், ஓர் இசைக்கலைஞன் (சிந்து பைரவி). இதற்கு மாறாக அவனுடைய மனைவி, இன்னொரு ஆணிடம் காதல் கொண்டிருந்தால் அது எப்படியிருந்திருக்கும் என்பது மாதிரியான விமர்சனங்களும் எழுந்திருக்கின்றன.
பொசஸிவ்னெஸ் உணர்வு மிகையாகப் பெருகி வழியும் மனைவியிடம் மாட்டித் தவிக்கும் ஒரு பாடகனின் கதைதான் ‘புதுப்புது அர்த்தங்கள்’. சில நல்ல இசை ஆல்பங்களைத் தந்த பாலசந்தர் + இளையராஜா கூட்டணியில் பிரிவு ஏற்பட்டு அவர்கள் இணைந்து பணிபுரிந்த கடைசி திரைப்படமாக இது ஆனது. படத்தை அவசரமாக வெளியிட வேண்டிய நெருக்கடி இயக்குநருக்கு. ஏற்கெனவே ஒப்புக் கொண்ட பணி காரணமாக ரீரெக்கார்டிங் செய்ய முடியாத சிக்கல் ராஜாவிற்கு. எனவே சில பழைய இசைக்கோர்வைகளைப் பின்னணி இசையாக இணைத்துப் படத்தை வெளியிட்டு விட்டார் பாலசந்தர்.
தன்னுடைய ஒப்புதல் இல்லாமல் இந்த விஷயம் நடந்ததால் ராஜாவிற்கு ஆட்சேபமும் வருத்தமும் எழுந்தன. எனவே இந்தக் கூட்டணி நிரந்தரமாகப் பிரிந்தது. இந்த விஷயம்தான் ஏ.ஆர்.ரஹ்மான் என்கிற டிரெண்ட் செட்டர் தமிழ் சினிமாவின் கதவுகளை அகலமாகத் திறந்து கொண்டு புயல் வேகத்தில் உள்ளே வருவதற்கும் காரணமாக அமைந்தது. இன்னொரு ரகுமானுக்கும் இந்தப் படம் ஸ்பெஷலாக அமைந்தது. நடிகர் ரகுமானின் நடிப்புப் பயணத்தில் சிறந்த முத்திரையைப் பதித்த படமாக இருந்தது ‘புதுப்புது அர்த்தங்கள்’.
பிரபலப் பாடகனின் ‘டார்ச்சர்’ மனைவி
பிரபலமான பாடகன் மணிபாரதி. அழகனும் கூட. எனவே ஏராளமான இளம் ரசிகைகள். ஒரு பிடிவாதக் குழந்தை, தனக்குப் பிடித்த பொம்மையை அடம் பிடித்து வாங்கிக் கொள்வது போல, மணிபாரதியின் அழகு மற்றும் புகழ் காரணமாக அவரைத் தேடி மணம் புரிந்து கொள்கிறாள் கெளரி. பணத்திமிர் கொண்ட குடும்பம் என்பதால் இது சாத்தியமாகிறது.
கெளரிக்கு தன் கணவன் மீது அதீதமான அன்பு. சாதாரண அன்பு இல்லை. ‘என் புருஷன்தான் எனக்கு மட்டும்தான்’ என்கிற பாடலை ஹைடெஸிபலில் பாடுவது போல ராட்சசத்தனமான அன்பு. அன்புக்கும் வெறுப்பிற்கும் இடையே ஒரு மெல்லிய கோடுதான் உண்டு. சற்று தாண்டினாலும் அதன் நிறம் எதிர்த்திசைக்கு மாறி விடும். தன் கணவனின் மீது ரசிகைகள் மற்றும் சக நடிகைகளின் மூச்சுக் காற்று பட்டால் கூட போதும். கெளரிக்குள் புயலடிக்க ஆரம்பித்து விடும். சந்தேகம், குதர்க்கம், வன்மம் போன்றவற்றுடன் கண்ணீரையும் கலந்து கேள்விக்கணைகளாகத் தொடுத்து மணிபாரதியை ‘டார்ச்சர்’ செய்வது கௌரியின் வழக்கம்.
மனைவியின் கொடுமையைத் தினம் தினம் அனுபவிக்கும் மணிபாரதி, ஒரு நாள் யாருக்கும் சொல்லாமல் ஊரை விட்டுச் சென்று விடுகிறார். தன்னுடைய பயணத்தின் வழியில், கணவனின் கொடுமையால் அவதிப்படும் ஓர் இளம்பெண்ணைச் சந்திக்கிறார். ஒரு நோக்கில் இருவரின் கதையும் ஒன்றே. எனவே இருவருக்குள்ளும் ஒருவகையான நேசம் உருவாகிறது.
தனக்குப் பிரியமான பொம்மை எங்கோ தொலைந்து விட்டதை அறியும் கெளரி, பதற்றம் அடைகிறார். தன் கணவனுக்கு இன்னொரு பெண்ணின் மீது நேசம் இருக்கிறது என்பதை அறிந்ததும் ஆத்திரத்தின் உச்சிக்கே செல்கிறார். பிடிக்காத பொம்மையை வீட்டிற்கு வெளியே தூக்கி எறிந்துவிடுவது போல, மணிபாரதியுடன் விவாகரத்து என்று அறிவிக்கிறார். பதிலுக்கு மணிபாரதியும் கோபம் கொள்ளப் பத்திரிகைகளின் வழியே அறிவிப்புப் போர் நடக்கிறது.
பிறகு என்னவானது? மணிபாரதி இன்னொரு திருமணம் செய்து கொண்டாரா? அல்லது கெளரியுடன் இணைந்தாரா? தேய்வழக்கான க்ளைமாக்ஸூடன் படம் நிறைகிறது.
கீதா, ரகுமான், சித்தாரா – புலி, ஆடு, புல்லுக்கட்டு
மணிபாரதியாக ரகுமான். புலியிடம் மாட்டிக் கொண்ட அப்பாவியான மான் மாதிரி, டார்ச்சர் செய்யும் மனைவியால் ஏற்படும் மனக்கொந்தளிப்பை தனது சிறந்த நடிப்பின் மூலம் வெளிப்படுத்தியிருக்கிறார். மீசை வைத்திருக்கிற ரகுமான், பார்ப்பதற்கு ஸ்மார்ட்டாக இருக்கிறார். பிரபலமான பாடகன் என்கிற புகழை உதறி விட்டு, முகம் தெரியாத ஒரு சராசரி மனிதனாக தனக்குப் பிடித்த பெண்ணுடன் வாழும் தற்காலிக வாழ்க்கையின் மகிழ்ச்சியை ஆத்மார்த்தமாக வெளிப்படுத்தியிருந்தார். மணிபாரதியின் பாத்திரத்திற்கு டப்பிங் குரல் தந்தவர் ‘நிழல்கள்’ ரவி.
சித்தாரா அறிமுகமான திரைப்படம் இது. ‘சிரிக்கும் போது தெரியற அந்த தெத்துப்பல்தான் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு’ என்று இவரைப் பார்த்து படத்தில் பூர்ணம் விஸ்வநாதன் சொல்வார். பிறகு ரசிகர்களும் இதையே வழிமொழிந்தார்கள். குடும்பப் பாங்கான தோற்றம் மற்றும் லட்சணமான முகத்தைக் கொண்ட சித்தாரா, ‘ஜோதி’ என்கிற பாத்திரத்திற்கு தன்னால் இயன்ற நியாயத்தைச் செய்தார்.
இந்த இரண்டு பிரதான கேரக்ட்டர்களையும் அநாயசமாக தூக்கிச் சாப்பிட்ட நடிகை யாரென்றால் அது கீதா. மணிபாரதியின் ‘டார்ச்சர்’ மனைவி கௌரியாக நடித்தவர். ‘இப்படியொரு மனைவி நமக்கு வாய்த்தால் அவ்வளவுதான்’ என்று படம் பார்க்கும் ஒவ்வொரு ஆணும் மனம் பதறக்கூடிய அளவிற்குச் சிறப்பான நடிப்பைத் தந்தார். இந்த கேரக்ட்டரின் மீது வெறுப்பு வரும் அளவிற்கு, கூடவே பரிதாபமும் வரும் வகையில் அற்புதமாக வடிவமைத்திருந்தார் பாலசந்தர். ‘கணவன் மேல அளவுக்கு மீறிப் பாசம் வெச்சதைத் தவிர அவங்க வேற எந்த தப்பும் பண்ணல’ என்று வருகிற வசனம்தான், இந்தப் பாத்திரத்தின் ஒன்லைன். தனது கணவனைக் கொஞ்சுவதைக் கூட மீசையை வலிக்கும் படி இழுத்து, கன்னத்தை அழுத்தமாகக் கிள்ளி, வேகமாக நெஞ்சில் மோதி… என்று ஆர்ப்பாட்டமான அன்புடன்தான் இந்தப் பாத்திரம் இயங்கும்.
‘மேடைல அந்த நடிகை உங்க பக்கத்துல உக்காந்துக்கிட்டு எதையோ சொல்லி சிரிச்சாளே… என்ன சொன்னா?’ என்று தன் கணவனைக் கேள்வி மேல் கேள்வியாகக் கேட்டு குடைந்தெடுப்பது முதல் படம் முழுவதும் கீதாவின் ராஜாங்கம்தான். இதில் என்னவொரு சுவாரஸ்யமான விஷயம் என்றால், சில வருடங்களுக்குப் பிறகு இதே பாலசந்தரின் இயக்கத்தில் வெளியான ‘கல்கி’ திரைப்படத்தில் சந்தேக எண்ணம் கொண்ட கணவரின் கொடுமையால் அவதிப்படும் பாத்திரத்திலும் கீதா சிறப்பாக நடித்திருந்தார். ‘என்னமோ சொன்னியே… நடுவுல… நடுவுல’ என்று கீதாவை டார்ச்சர் செய்வார் பிரகாஷ்ராஜ். (காலம் எவ்வளவு வேகமா சுத்துது பார்த்தீங்களா?!)
‘இன்னிக்கு செத்தா… நாளைக்குப் பால்’ – விவேக் காமெடி
பாலசந்தரின் திரைப்படங்களில் பிரதான பாத்திரங்களைத் தவிர ஏராளமான துணைப் பாத்திரங்கள் வரும். அவற்றில் ஒவ்வொன்றுமே பார்வையாளர்களின் மனதில் தங்கும்படியான பிரத்யேகத்தன்மையுடன் படைக்கப்பட்டிருக்கும். இதிலும் அப்படியே. ‘ஜாலி’ என்கிற பெயருக்கு ஏற்ப, தனது வாழ்க்கையைத் தினம் ஒரு பெண்ணுடன் ஜாலியாகக் கழிக்கும் வயலினிஸ்ட்டாக ஜனகராஜ் அமர்க்களப்படுத்தியிருந்தார். ரெக்கார்டிங்கிற்குத் தாமதமாகக் கிளம்பி காரிலேயே பல் துலக்குவது முதல் அனைத்தையும் செய்யும் காட்சி, உதவியாளரின் மூலம் போனில் பொய் சொல்வதைச் சைகை மூலமாகவே சொல்லும் காட்சி போன்றவை சுவாரஸ்யமானவை.
ஜனகராஜின் உதவியாளராக மாஸ்டர் கணேஷ் நடித்திருந்தார். “ஒரு வருங்கால முதலமைச்சரை இப்படியெல்லாம் நடத்தறீங்க” என்று இவர் செய்யும் அலப்பறைகள் தனியாவர்த்தனம். முதல்வர் நாற்காலிக்கு எளிதில் ஆசைப்படும் நபர்களை இந்தப் பாத்திரத்தின் மூலமாக பாலசந்தர் கிண்டலடித்திருந்தார். (ரஜினியையும் சேர்த்தோ?!)
ஒரு திறமையான நடிகன் ஆரம்பத்திலேயே தனியாகப் பிரகாசிக்கத் தொடங்கி விடுவான் என்பதற்கான உதாரணம் விவேக். ‘மனதில் உறுதி வேண்டும்’ படத்தில் அறிமுகமான அவரின் இரண்டாவது படம் இது. பாடகர் மணிபாரதியின் விசுவாசமான பி.ஏ. ‘இன்னிக்கு செத்தா, நாளைக்கு பால்’ என்கிற அழியாத தத்துவ வசனத்தை இந்தப் படத்தின் மூலம் பிரபலமாக்கினார். கெச்சலான உடம்பை வைத்துக் கொண்டு விவேக் செய்த காமெடிக் காட்சிகள் சுவாரஸ்யம். தான் அடிக்கடி சொல்லும் வசனத்தின் மூலமாகவே பிறகு மாட்டிக் கொண்டு விழிபிதுங்கும் காட்சியில் இவர் சிறப்பாக நடித்திருந்தார்.
அமர்க்களம் செய்திருந்த ‘காக்கிநாடா காஞ்சனம்மா’
இந்தத் துணைப் பாத்திரங்களின் வரிசையில் தலைமையிடத்தில் கம்பீரமாக அமர்வது காக்கிநாடா காஞ்சனம்மாதான். ஆம், இந்த ரகளையான கேரக்ட்டரில் கச்சிதமாகப் பொருந்தியிருந்தார் ஜெயசித்ரா. அகம்பாவம் பிடித்த பெண்ணாக நடிப்பதென்றால் இவருக்கு ஆரம்பத்திலிருந்தே எளிதுதான். அதன் உச்சம் இந்தப் பாத்திரம் என்று சொல்லலாம். பணம், செல்வாக்கு, அதிகாரம் போன்ற மமதைகளால் நிரம்பியிருக்கும் ஒரு பெண் பாத்திரத்திற்கு அச்சு அசலாக உயிரூட்டியிருந்தார்.
தெலுங்கு வாசனை கணிசமாக அடிக்கும் வசனங்களின் மூலம் ‘தமிழ்ல ஏதோ சொல்லுவாங்களே… என்னது அது..?’ என்று இவர் அடிக்கடி கேட்பதை அந்நிய மொழி பேசுபவர்களிடம் வழக்கமாகக் காண முடியும். சுந்தரத் தெலுங்கில் இவர் உதிர்க்கும் வசைகள் கேட்பதற்குக் கொடுமையாகவும் சுவாரஸ்யமாகவும் இருந்தன. இவருடைய அதே திமிர்தான் மகளுக்கு வந்திருக்கிறது என்பதைத் தனியாகச் சொல்லத் தேவையில்லை. ‘ஸ்பாயில்ட் சைல்ட்’ உருவாவதற்குப் பொதுவாக அதீதமான செல்லம் தரும் பெற்றோர்கள்தான் காரணமாக இருப்பார்கள்.
வீட்டுப் பணியாளரின் பெண்ணின் தலைமுடியை வெட்டி விட்டு ‘உன் பொண்ணுக்கு காலேஜ் பீஸ் வேணும்ன்னு கேட்டேல்ல’ என்று பணம் தரும் திமிரான காட்சி முதல் “மாப்ளே… என் பொண்ணை வந்து தயவுசெஞ்சு பாருங்க” என்று கைகூப்பி உருகும் காட்சி வரை ‘காக்கிநாடா காஞ்சனம்மாவின்’ கொடி ஆந்திரா தாண்டியும் அசால்ட்டாகப் பறக்கிறது.
எழுபது வயதைத் தாண்டினாலும், பரஸ்பரம் ‘டார்லிங்… டார்லிங்’ என்று அழைத்து அன்பு செலுத்தும் ஆதர்சமான தம்பதிகளாக பூர்ணம் விஸ்வநாதனும் சௌகார் ஜானகியும் நடித்திருந்தார்கள். ‘ஜாலி’ ஜனகராஜ் போலவே பார்க்கும் பெண்களையெல்லாம் சைட் அடிக்கும் ரோமியோ கிழவராக அசத்தியிருந்தார் பூர்ணம். ‘நடிகை அமலாவிற்கு முத்தம் தருவதுதான் என் வாழ்நாள் லட்சியம்’ என்று இவர் ஜாலியாகச் சொல்லும் அதே விஷயம் பிறகு வேறு மாதிரியாக மாறுவது டிராஜடி. இவற்றைத் தவிர ஒரு தொலைக்காட்சி பிராண்டும் இந்தப் படத்தில் கணிசமாக நடித்திருந்தது. டைட்டில் கார்டிலும் பெயர் இடம் பெற்றிருந்தது. (வணிக ஒப்பந்தமோ?!)
பாலசந்தரின் ஆஸ்தான ஒளிப்பதிவாளரான ரகுநாதரெட்டியின் அசாதாரணமான திறமை இதிலும் பளிச்சிட்டது. பாடல் காட்சிகள் அனைத்தும் ரம்மியமாகப் பதிவாகியிருந்தன. புகைப்படங்கள் ப்ரீஸ் ஆகும் ‘குருவாயூரப்பா’ பாட்டு அழகான உத்தி.
இளையராஜா + பாலசந்தர் கூட்டணியின் கடைசி திரைப்படம்
இந்தப் படத்தின் வெற்றிக்கு இளையராஜாவின் பாடல்கள் பெரிய காரணமாக இருந்தன என்பதைச் சொல்லவே தேவையில்லை. ‘கேளடி கண்மணி’, ‘கல்யாண மாலை’, ‘குருவாயூரப்பா’ போன்ற பாடல்கள், இன்றும் கூட இசைக்கச்சேரிகளில் தொடர்ந்து பாடப்படும் அளவிற்கு ஹிட் ஆகின. இளையராஜா திக்கித் திக்கி பாட, பாலு வழக்கம் போல் அமர்க்களப்படுத்திய ‘எடுத்து நான் விடவா?’ ஒரு க்யூட்டான பாட்டு. ‘எல்லோரும் மாவாட்ட கத்துக்கிடணும்’ என்பது ஜாலியான மெட்டு. பின்னணி இசையும் பல இடங்களில் அருமை என்றாலும், சில இடங்களில் பொருந்தாமல் திணித்தது போல் தோன்றுவதற்கு அதன் பின்னணிக் காரணத்தை அறிந்ததால் ஏற்பட்ட பிரமைதான் காரணமோ, என்னவோ. ஒரு பாடல்காட்சியில் இசையமைப்பாளராக இளையராஜாவே தோன்றுகிறார். தாமதமாக வரும் வயலினிஸ்ட் ஜனகராஜை இவர் ஜாலியாகக் கடிந்து கொள்வது சுவாரஸ்யமான காட்சி.
‘சித்ராலயா கோபு’ எழுதிய ஒரு நாடகம்தான், இந்தத் திரைப்படத்தின் அடிப்படைக்கரு என்று சொல்லப்படுகிறது. பாலசந்தரின் பிரத்யேக முத்திரைகள் படம் முழுவதும் அற்புதமாக விழுந்திருந்தன. கீதா நின்றிருக்கும் ஒரு காட்சியில் அவர் மீது ஜெயசித்ராவின் நிழல் பெரிதாகக் கவிந்திருக்கும். அம்மாவின் கட்டுப்பாட்டில் மகள் இருக்கிறாள் என்பது காட்சி பூர்வமாக உணர்த்தப்பட்டிருக்கும். தொலைக்காட்சி விளம்பரத்தில் தோன்றும் மணிபாரதி உருவத்தின் மீது, தோழி முத்தமிட முயலும் போது சட்டென்று கௌரி தொலைக்காட்சியை அணைத்து விடுவது அவரின் ‘பொசஸிவ்னெஸ்’ குணாதிசயத்திற்குச் சிறந்த உதாரணக் காட்சி.
‘அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு’ எனப்படுவது போல மிகையான அன்பும் கொடுமையாகி விடும் என்கிற செய்தி கீதாவின் பாத்திரத்தின் மூலம் சொல்லப்பட்டிருக்கிறது. முதிய வயதிலும் பரஸ்பர அன்புடன் வாழும் ஒரு தம்பதியின் மூலம் திருமணத்திற்கான முன்னுதாரணம் உணர்த்தப்பட்டிருக்கிறது. உறவுச்சிக்கல் என்ற பிரச்னை திரைக்கதையில் திறமையாகப் பயணித்தாலும் இறுதியில் கிளிஷேவாக முடித்துவிடுவது பாலசந்தரின் படங்களில் நிகழும் தொடர் விபத்து. இதிலும் அதே செயற்கைத்தனம் தொடர்கிறது. சர்ச்சையாகி விடக்கூடாது என்பதற்காகத் திருமணத்தின் புனிதம், விவாகரத்தின் அவசியம் ஆகிய விஷயங்கள் படத்தினுள் விவாதமாகப் பேசப்படுகின்றன.
ரகுமான், கீதாவின் சிறந்த குணச்சித்திர நடிப்பு, ஜனகராஜின் ரொமான்ஸ் குறும்புகள், விவேக்கின் அமர்க்கள காமெடி, ஜெயசித்ராவின் அதிரடியான அலப்பறை, இளையராஜாவின் இனிமையான பாடல்கள், பாலசந்தரின் டிரேட்மார்க் காட்சிகள், உறவுச்சிக்கலைப் பேசிய விதம் போன்ற காரணங்களால் தனது அர்த்தமுள்ள சுவாரஸ்யத்தை இன்னமும் கூட இழக்காமல் இருக்கிறது, ‘புதுப்புது அர்த்தங்கள்’.
இந்தத் தொடரில் அடுத்த எந்தப் படத்தைப் பார்க்கலாம் என்பதை கமென்ட்டில் சொல்லுங்கள்.