தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தைச் சேர்ந்த தந்தை, மகனான ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோர் விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்டனர். விசாரணையின் போது இருவரும் போலீஸாரால் கடுமையாகத் தாக்கப்பட்டனர். கோவில்பட்டி கிளைச்சிறையில் அடைக்கப்பட்ட இருவரும் அடுத்தடுத்த நாள்களிலேயே உயிரிழந்தனர். இந்தக் கொலை வழக்கில் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன் உட்பட 9 பேர் கைதுசெய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருக்கின்றனர்.
இவ்வழக்கு, மதுரை முதலாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கின் விசாரணை பொறுப்பு நீதிபதி தமிழரசி முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. சி.பி.ஐ-யால் ஆய்வு செய்யப்பட்ட எய்ம்ஸ் மருத்துவக் குழுவில் இடம் பெற்றிருந்த புதுடெல்லி ஹார்டிங்கே மருத்துவக் கல்லூரியின் தடயவியல் மற்றும் நச்சுவியல் துறை பேராசிரியர் அரவிந்த்குமார் ஆஜராகி சாட்சியம் அளித்திருக்கிறார். அதில், “எய்ம்ஸ் மருத்துவர் பேராசிரியர் ஆதர்ஷ்குமார் தலைமையில் நான் மற்றும் பேராசிரியர் மணிஷ்குமத் ஆகியோர் மருத்துவக் குழுவில் இடம்பெற்றிருந்தோம்.
தந்தை, மகன் இருவரும் கொடுமைப்படுத்தப்பட்டிருக்கின்றனர். லத்தி போன்ற கடுமையான ஆயுதங்களைக் கொண்டு தாக்கப்பட்டிருக்கின்றனர். பின்பகுதி, மூட்டு, உள்ளங்கால்கள், உள்ளங்கைகள் உள்ளிட்ட பல இடங்களில் கடுமையாகத் தாக்கியிருக்கின்றனர். சாத்தான்குளம், காவல் நிலையம், சாத்தான்குளம் அரசு மருத்துவமனை, கோவில்பட்டி கிளைச்சிறை, கோவில்பட்டி அரசு மருத்துவமனை, நெல்லை அரசு மருத்துவமனை ஆகிய இடங்களில் ஆய்வு மேற்கொண்டோம்.
மருத்துவர்கள் வினிலா, வெங்கடேஷ் ஆகியோரிடம் விசாரித்தோம். `இருவரும் லத்தியால் தாக்கப்பட்டதில் பலத்த காயம் ஏற்பட்டு உடல உள்ளுறுப்புகள் செயழிலந்தது’ என கூறியிருக்கின்றனர். எங்களது ஆய்வில் தெரியவந்த தகவல்கள் உண்மை என்பதால் அதனை உறுதிபடுத்தியிருக்கிறோம். எங்களது ஆய்வறிக்கை சி.பி.ஐ-யின் இறுதி அறிக்கையில் இடம் பெற்றிருக்கிறது” எனக் கூறியிருக்கிறார். இதனையடுத்து வழக்கு விசாரணை வரும் 24-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது.